அனுபவத்தின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், நெருக்கமானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில், ஓய்வு பெறுவதற்கு ஒருநாளைக்கு முன்பு மூத்த ஐபிஎஸ் அலுவலர் சுனில் குமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறை கூடுதல் இயக்குநராக பதவி வகித்துவரும் ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஓய்வுபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு சுனில் குமாருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மூத்த ஐபிஎஸ் அலுவலர் ரவீந்திரநாத் தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ரவீந்திரநாத் கூறுகையில், "நான் சீனியராக இருந்தபோதிலும் எனக்குப் பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. என்னுடைய ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அலைக்கழிக்கப்பட்டு உள்ளதால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
எனக்கான நீதியை சிலர் மறுக்கின்றனர். இதுபோன்ற அலைக்கழிப்பை தவிர்ப்பதற்காகவும் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்காகவும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்றார்.