கோவிட் 19 (கரோனா) வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 107 பேர் இந்த வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெறவிருந்த பள்ளி இறுதி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கோவிட் 19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எட்டாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை நடைபெறவிருந்த முழு ஆண்டுத் தேர்வுகள் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிடப்பட்டபடி வரும் மார்ச் 27ஆம் தேதி தேர்வுகள் தொடங்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
அதேபோல தற்போது நடைபெற்றுவரும் 12ஆம் வகுப்பு தேர்வுகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 107 ஆக உயர்வு!