கரோனா தொற்று தற்போது குழந்தைகளின் கல்வி அமைப்பு முறையை பாதித்துள்ளது. இதன் மூலமாக தொழில்நுட்பம் வளர்ந்து ஏழை குழந்தைகள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமத்துவம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சிக்காபல்லப்பூர் மாவட்ட சிறப்பு தலைமை அலுவலர் போஷியா தரணும், கிராமங்களில் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அரசு பள்ளிகளை புதுமையாக மாற்றி வருகிறார். குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் அங்கன்வாடி மைய பகுதிகளை அவர்களுக்கு ஏற்றார்போல் மாற்றி வடிவமைத்து அழகுபடுத்தி வருகிறார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பல அங்கன்வாடிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குழந்தைகளுக்கு பிடித்த சோட்டா பீம் போன்ற பல கார்ட்டூன் கதாபாத்திரங்களின் படங்கள் சுவர்களில் வரையப்படுகின்றன. இந்த சுவர்களில் ஆங்கிலம், கன்னட மொழிகளில் பழமொழிகளும் எழுதப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்காக மொத்தம் எட்டு லட்சம் ரூபாய்வரை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் உதவியுடன் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பு மூலம் பணக்கார குழந்தைகள் படித்துவிடுகின்றனர். ஏழை குழந்தைகளுக்கு அவ்வாறு ஒரு சூழ்நிலை இல்லை. இது மிகப்பெரிய இடைவெளி ஒன்றை ஏற்படுத்துகிறது. அரசு பள்ளிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இத்திட்டம் மூலம் அது அதிகரிக்கும் என்பதால் அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாக இதுபோன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.