பச்சை மண்டலமாக உள்ள காரைக்காலில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா, ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ”கரோனோ வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீடித்துள்ளது. வைரஸ் பாதிப்புப் பகுதிகளில் காரைக்கால் மாவட்டம் பச்சை மண்டலமாக உள்ளது. பச்சை மண்டலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஊரடங்குத் தளர்வுகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாவட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு முடிவெடுக்கப்படும்.
மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து, மாவட்டங்களுக்கிடையேயான பிற போக்குவரத்துகளுக்கு அனுமதி கிடையாது. மாவட்ட எல்லைப் பகுதிகளில் பழைய நிலையே நீடிக்கும். மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தற்போதைக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாது.
வணிகர்கள் கடைகள் திறப்பது தொடர்பாக உரிய முறையில் விண்ணப்பித்து அனுமதி பெற்று திறக்கலாம். மாலை ஏழு மணி முதல் காலை ஏழு மணி வரை அத்தியாவசியத் தேவைகள் தவிர, வேறு மக்கள் நடமாட்டம், போக்குவரத்துகளுக்கு அனுமதி கிடையாது.
மதுக்கடைகளை திறப்பது குறித்து புதுச்சேரி மாநிலத் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். சென்னை, கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்ததாக காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை யாரும் கண்டறியப்படவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலம், ரிவா மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு பள்ளியான ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் படித்து வரும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 17 மாணவ-மாணவிகள் குறித்து பேசிய ஆட்சியர், “அவர்களுக்குத் தேவையான, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுவது குறித்து ரிவா மாவட்ட ஆட்சியருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “மாணவர்களை பாதுகாப்பாக காரைக்காலுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுவை முதலமைச்சர் நாராயணசாமியுடன் தொழில் வர்த்தக சங்கத்தினர் ஆலோசனை