உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் 60க்கும் மேலான வழக்குகள் தொடர்பாகத் தேடப்பட்டுவரும் குற்றவாளியான விகாஸ் துபே, திக்ரு கிராமத்தில் மறைந்திருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் விகாஸ் துபேவை கைதுசெய்ய சென்றபோது, எதிர்பாராவிதமாக விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அதில், காவல் துறையைச் சேர்ந்த ஒரு டிஎஸ்பி, மூன்று உதவி ஆய்வாளர்கள், நான்கு காவலர்கள் என எட்டு பேர் கொல்லப்பட்டனர்; 7 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, காவல் துறையினர் கைதுசெய்ய வருவது விகாஸ் துபேவுக்கு எப்படி முன்னதாகவே தெரிந்தது என்ற கேள்வி எழுந்தது.
விசாரணையில், விகாஸ் துபேவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த காவலர்கள் சிலர் அவருக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்ததால், அவர் தனது கூட்டாளிகளை ஒன்றாக இணைத்து தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவருடன் தொடர்பிலிருந்த ஒரு உதவி ஆய்வாளர், மூன்று காவலர்கள் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உ.பி. டான் விகாஸ் துபே வீட்டிலிருந்து வெடிப்பொருட்கள், துப்பாக்கிகள் பறிமுதல்!