மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது திமுக எம்பி கனிமொழி பேசுகையில் பாரம்பரிய சிலைகள் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகள் கீழ்வருமாறு:
- தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நம் கோயில் சிலைகள் எத்தனை கடத்தப்பட்டுள்ளன?
- அதில் எத்தனை சிலைகள் மீட்கப்பட்டன?
- அதற்கான கணக்கை அரசு பதிவு செய்துள்ளதா?
- வெளிநாடுகளுக்கு எத்தனை சிலைகள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டன?
- அதற்கான பதிவு அரசிடம் உள்ளதா?
எம்பி கனிமொழியின் மேற்கண்ட கேள்விக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பதிலளிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 33 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதில் பெரும்பாலான சிலைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை எனக் குறிப்பிட்ட பிரகலாத், 33 சிலைகள் தவிர மேலும் 40 சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருவதாக கூறினார்.
வெளிநாடுகளில் இருக்கும் அருங்காட்சியகத்தில் எத்தனை இந்திய சிலைகள் உள்ளன என்ற கணக்கு இந்திய தொல்பொருள் கழகத்திடம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு கொண்டுவர முயற்சி செய்துவருவதாகவும் உறுதியளித்தார்.