புதுச்சேரியில் கர்மவீரர் காமராஜர் சிறப்பை விளக்கும் விதமாக அரசு பல நலத் திட்டங்களுக்கு அவரது பெயரை வைத்து சிறப்பித்து வருகிறது. இதனிடையே, காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட அரசு முடிவு செய்து, இதற்காக கருவாடிகுப்பம் சித்தானந்த கோயில் அருகே 3.75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கடந்த 2007ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளும் தொடங்கியன.
பின்னர் 2009ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ரங்கசாமி பதவி விலகியதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் முதலமைச்சராக அமர்ந்தார். அப்போது, மணிமண்டபம் கட்டும் பணி சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. 2011ஆம் ஆண்டு மீண்டும் ரங்கசாமி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதைய சூழலில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் மணிமண்டபம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
எடுத்த பணியை முடித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, 2014ஆம் ஆண்டு மறு உருவாக்கமாக 24 கோடி ரூபாய் ஹாட்கோ கடனுதவி பெற்று மீண்டும் காமரஜார் மணிமண்டபம் கட்டுவதற்கு இரண்டாம் கட்டமாக அடிக்கல் நாட்டினார். இந்த முறை சிறிய மாற்றத்துடன் மணிமண்டபம் கட்டப்படும் இடத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இங்கு 130 பேர் அமரும் வகையில் ஆடிட்டோரியம், ஒரே நேரத்தில் 150 மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நூலகம் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. துரிதமாக நடைபெற்று வந்த பணி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கட்டுமான பணிகளில் சுனக்கம் ஏற்பட்டது. மணிமண்டபம் கட்டத் தொடங்கி 13 ஆண்டுகளை கடந்துவிட்டன. ஆட்சியாளர்கள் மாறி, மாறி அரியணைக்கு வந்தாலும் காமராஜர் மணிமண்டபம் கட்டி முடிந்த பாடில்லை.
கிட்டத்தட்ட 90 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அருங்காட்சியகம் காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள் காமராஜர் சிலை வைப்பது தரையை அழகுபடுத்துவது போன்ற வேலைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும் கல்விக் கண் திறந்த காமராஜரை கடைக்கண் பார்வையுடன் பார்ப்பது வேதனையாகத்தான் இருக்கிறது.
இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொதுச் சபைத் தலைவர் ஆனந்த் கூறியதாவது, "மணிமண்டபம், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் போன்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று முதலமைச்சர்கள், கடந்து 13 வருடங்களாக, கட்டப்பட்டு வரும் இந்த மணிமணடம், 75 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளன. இது எதற்காக கட்டப்பட்டது, ஆட்சியாளர்கள் எதற்கு என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள்" என அவர் தெரிவித்தார்.
மணிமண்டபத்தின் நோக்கம் இளைஞர்கள் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு தான். ஆனால் இன்றுவரை கட்டி முடிக்காமல் இருப்பது மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரிக்கு நிதி நெருக்கடி இருந்தாலும் கூட மணிமண்டபம் கட்டுவதற்கு பல்வேறு துறைகளிலிருந்து நிதிகளைக் கொண்டு அதனை அரசு உடனடியாக முடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலர் பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
இது குறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, "பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. நிதி பிரச்னை ஏதுமில்லை கரோனா ஊரடங்கு காலத்தில் சிறிது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது விரைவில் கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஆன்லைன் மூலம் வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்