புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, இத்தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும், சபாநாயகருமான வைத்திலிங்கம் இத்தொகுதியில் திறம்படச் செயல்பட்டுவந்தார்.
பின்னர் அவர் புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, இந்த தொகுதி காலியானது. இந்நிலையில் கடும் போட்டிக்கிடையே, புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் டெல்லி சிறப்புப் பிரதிநிதியுமான ஜான் குமார், காமராஜ் நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 54 வயதான இவர், பிபிஏ பட்டதாரியாவர். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டுவருகிறார்
![காமராஜ் நகர் இடைத்தேர்தல் சிறப்புப் பார்வை kamaraj nagar by election special view of the constituency என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4791639_congresvsnrcongress.jpg)
இரு வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள்
காமராஜ் நகர் இடைத்தேர்தலில், போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு கார், நகை, கையிருப்பு உள்ளிட்ட அசையும் சொத்துக்களாக அவர் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் ரூ. 2.88 கோடி உள்ளதாக தகவல் கொடுத்துள்ளார். மேலும், நிலம், கட்டடம் போன்ற அசையா சொத்துக்கள் ரூ. 29.38 கோடி மதிப்பிலுள்ளது. மொத்தமாக, ரூ. 32.27 கோடி சொத்து மதிப்பு காட்டப்பட்டுள்ளது. கடனாக ரூ. 5.02 கோடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
![காமராஜ் நகர் இடைத்தேர்தல் சிறப்புப் பார்வை kamaraj nagar by election special view of the constituency என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4791639_congress.jpg)
என்.ஆர்.காங்., வேட்பாளர் புவனேஸ்வரன், அவரது மனைவி பெயரில் நகை, பணம் உள்ளிட்ட அசையும் சொத்துக்களாக ரூ. 2.17 கோடியும், அசையாகச் சொத்து ரூ. 14.50 கோடியும் என, மொத்தம் ரூ. 16.67 கோடிக்குச் சொத்து இருப்பதாகவும், கடனாக ரூ.1.18 கோடி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
![காமராஜ் நகர் இடைத்தேர்தல் சிறப்புப் பார்வை kamaraj nagar by election special view of the constituency என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4791639_nrcongress.jpg)
தேர்தல் வரலாறு
35,325 வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 11,618 வாக்குகளைப் பெற்று, 5,106 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, அடுத்து வந்த மக்களவைத் தேர்தலிலும் இந்தத் தொகுதியில் சுமார் 15,000 வாக்குகளைப் பெற்றார் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கம். இந்த நிலையான வாக்கு வங்கிகள் தங்களுக்கு வெற்றிக்கு வழிவகுக்கும் என, காங்கிரஸ் கட்சி நம்புகிறது.
தொகுதி பிரச்னைகள்
- உள்கட்டமைப்பு இல்லை
- குடிநீரில் உப்பு நீர்
- இலவச அரிசி வழங்கப்படாதது
- வேலைவாய்ப்பு குறைவு
- குப்பைக் கிடங்கு
- கொசுத் தொல்லை
ஆகியவை ஆளும் கட்சிக்கு எதிராக நிற்கும் சவால்கள்.
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன்(55) பள்ளிப்படிப்பு படித்துள்ளார். புவனேஸ்வரனைப் பொறுத்தவரை, பொருளாதார பலம் மிக்கவர் என்பதும், முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் போட்டியிடுவதும் பலம். அதேசமயம், பக்கத்துத் தொகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் தொகுதியைச் சேராதவர் என்பது மட்டுமல்ல, மக்களுக்கு அறிமுகமில்லாதவர் என்பவை இவருக்கு பாதகமாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இங்கு தனித்துப் போட்டியிட்டு 6,512 வாக்குகள் பெற்ற அ.தி.மு.க-வும், 3,642 வாக்குகள் பெற்ற என்.ஆர்.காங்கிரஸும், 764 வாக்குகள் பெற்ற பாஜக-வும், தற்போது ஒரே அணியில் இருப்பது தங்களுக்குச் சாதகமானதாக நினைக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ். அ.தி.மு.க., பாஜக., உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் வீடு வீடாகச் சென்று ரங்கசாமி வாக்கு சேகரித்து வருகிறார்.