மத்தியப் பிரதேசத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வென்று, சுயேச்சை, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகியோரின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் பலர் மாயமாகியுள்ளனர்.
இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ. நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், "கமல்நாத் அரசுக்கு பெரும்பான்மை இல்லை. இந்த ஆட்சி நிலைக்காது. எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் அழுத்தம் தருகிறது. இது நடக்க நாங்கள் விடமாட்டோம். எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர்களால் நிரூபிக்க முடியாது. அவர்களின் வீட்டையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், பாஜக மீது குற்றம் சுமத்துகிறார்கள்" என்றார்.
இதற்கு மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத்தின் மகன் நகுல் நாத் பதிலளிக்கையில், "மத்தியப் பிரதேச அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை. மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திரும்பிவருவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: உள் துறை அமைச்சரை சந்திக்கிறார் மேற்கு வங்க ஆளுநர்!