கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பயிற்சி மருத்துவர்களைக் கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் பயிற்சி மருத்துவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நாடு தழுவிய போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் இயங்காது என்றும், அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே இயங்கும் என்றும் ஜிப்மர் மருத்துவ சங்கம் அறிவித்திருந்தது.
இதேபோல் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தில் இறங்கினர். மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் முழக்கமிட்டனர்.
இதனால், இன்று ஜிப்மர் மருத்துவமனையில் நடக்கவிருந்த 80 அறுவை சிகிச்சை தேதிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வெளியூர், உள்ளூர் நோயாளிகளுக்கு தெரியாததால் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற முடியாமல் அவர்கள் திரும்பிச் சென்றனர். மருத்துவர்களின் இந்தப் போராட்டத்தால் பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
![புதுச்சேரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-1-17-jipmer-doctors-strik-7205842_17062019111120_1706f_1560750080_969.jpg)