மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் அணைகள் கட்டுவது, புனல் மற்றும் அனல் மின்சாரம் உற்பத்தி நிலையங்களை பராமரிப்பது, தாமோதர் ஆற்றில் வெள்ளத்தடுப்பு, மண்வளப் பாதுகாப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள இந்திய அரசால் தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் உருவாக்கப்பட்டது.
இந்த பணிகள் அனைத்தும் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு மற்றும் இரு மாநில அரசுகளால் இணைந்து பெறப்பட்ட நிதி உதவியால் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசுகள் தரவேண்டிய நிலுவைத்தொகையை ஆர்.பி.ஐ. அவ்வப்போது வசூலித்துவருகிறது.
இந்நிலையில், கோவிட்-19 பாதிப்பால் மிகவும் பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்ட் அரசு கடும் நிதி நெருக்கடிக்குள்ளாகி நிற்கும் சூழலில், அம்மாநில அரசிற்கு வழங்க வேண்டிய நிதியிலிருந்து ரூ. 1,417 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு கழித்து, ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்துள்ளதாக அறியமுடிகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜார்க்கண்ட் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலவிவரும் காலத்தில், மாநில அரசு பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இச்சூழலில் ஜார்க்கண்ட் அரசின் நிதியிலிருந்து 1,417 கோடி ரூபாயை நிலுவைத்தொகையாக கழித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தாமோதர் பள்ளத்தாக்கு கழக ஒப்பந்தம் சாதாரண சூழ்நிலையில் கையெழுத்திடப்பட்டது. அதன் சரத்துகள் அனைத்து இயல்பாக காலக்கட்டங்களுக்கு பொருந்தும். ஆனால், இதுவரை கண்டிராத அளவு பேரழிவை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அந்த ஒப்பந்தத்தை எப்படி பின்பற்ற முடியும் ? அது இயலாத காரியம்.
இப்போது சட்டத்தின் விதிகளை அமல்படுத்துவது அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது. ஒழுக்கக்கேடானது மற்றும் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்க்குலைக்கும் செயலாகும். பழங்குடி, தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் மாநிலமான ஜார்க்கண்ட் போன்றவற்றிலிருந்து நிலுவைத்தொகை கழிக்கப்பட்டுள்ளதை எப்படி ஏற்க முடியும் ?.
மூன்று தரப்பு ஒப்பந்தத்தின்படி, தற்போது எங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். தொற்றுநோய் போன்ற பேரிடர்களின் போது அரசின் நிதியிலிருந்து நிலுவைத் தொகை கழிக்கப்படக் கூடாது. 2020ஆம் ஆண்டு ஜனவரியில், எனது தலைமையிலான அரசு அமைந்த அரசாங்கத்தை வழிநடத்தி தொடங்கியபோது, ரூ .1,313 கோடி நிலுவைத் தொகையாக இருந்தது. ஆட்சி அமைத்த சில நாள்களிலேயே பொருளாதார நெருக்கடிகளையும் மீறி ரூ.741 கோடி செலுத்தினோம்.
ஜார்க்கண்டை விட மற்ற மாநிலங்களுக்கு அதிக கடன் பாக்கியை வைத்துள்ளன. நாங்கள் வெறும் 5,500 கோடி ரூபாயை மட்டுமே நிலுவைத் தொகையாக வைத்திருக்கிறோம். எனவே, உடனடியாக அந்த நிதியை மீண்டும் மாநில அரசிற்கு வழங்க வேண்டும். அதேபோல, நிலக்கரி அமைச்சகத்தை ஒப்பந்தத்தில் நான்காவது தரப்பினராக்க வேண்டும்" என கோரியுள்ளார்.