கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் நெருக்கடியால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்துவரும் லட்சக்கணக்கான இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர மே 7ஆம் தேதி முதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற பெயரில் இந்திய அரசின் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றன. மத்திய வெளியுறவுத் துறையின் கண்காணிப்பின்கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் கொண்டு வரும் பணியில் ஈடுபட ஜெட் ஏர்வேஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
பெருநிறுவன தொழில்முறை வல்லுநர் ஆஷிஷ் சாவ்சாரியா, பெருநிறுவன விவகார செயலாளர் இன்ஜெட்டி சீனிவாஸுக்கு மே 20 அன்று எழுதிய கடிதத்தில், ‘பரந்த நெடும் கட்டமைப்பைக் கொண்ட இரண்டு போயிங் 777-300 ஈஆர்களை வந்தே பாரத் மிஷன் திட்டத்திற்கு பயன்படுத்தி வெவ்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவரலாம்’ என குறிப்பிட்டிருந்தார்.
சிவில் விமானப் போக்குவரத்துச் செயலாளர் பிரதீப் சிங் கரோலா, விமான ஒழுங்குமுறை டி.ஜி.சி.ஏ தலைவர் அருண்குமார் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைவர் ரஜ்னிஷ் குமார் ஆகியோருக்கும் அந்த கடிதத்தின் நகல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தற்போது துணை குத்தகை ஏற்பாட்டின் கீழ் இயக்கப்படும் ஏர் பஸ் ஏ 330 -200 விமான ஏர் செர்பியாவால் இயக்கப்படுகின்றது. மீதமுள்ள 10 விமானங்கள் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு போயிங் 777-300ER விமானம், தற்போது அமெரிக்காவின் ஆம்ஸ்டர்டாமில் நிறுத்தப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸில் 12 விமானங்கள் உள்ளன. அவை நேரடியாகவோ அல்லது நிதி ஏற்பாட்டின் கீழ் அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
கடன் சுமை, செயல்பாட்டு மூலதன பற்றாக்குறை என கடும் நெருக்கடிக்குள்ளாகிய நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதியன்று தனது விமான போக்குவரத்து சேவையை முழுமையாக நிறுத்துவதாக அறிவித்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப அனுமதி!