கடன் நெருக்கடி, சம்பளப் பாக்கி உள்ளிட்ட காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடங்கியுள்ளது.
கடன் கொடுத்த எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கைப்பற்றி கடனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிட்டு கடன் சுமையிலிருந்து அந்நிறுவனத்தை மீட்டக்கோரி டெல்லி சப்தர்ஜங் விமான நிலைய எதிரில் இன்று காலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'ஜெட் ஏர்வேஸை மீட்க வேண்டும்', 'எங்கள் அழுகையைக் கேளுங்கள்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, ஜெட் ஏர்வேஸ் ஊழியர் பூஜா கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கிடைக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் நான் மட்டும்தான் வேலைக்குச் செல்கிறேன். ஜெட் ஏர்வேஸில் நிறுவனத்தில் பணிபுரியும் 22 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். இந்தப் பிரச்னையால் நிறுவனத்தை நம்பியுள்ள பல்வேறு குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது" என்றார்.
போராட்டம் குறித்து ஜெட் ஏர்வேஸ் தலைவர் அஜய் ஹரிநாத் சிங், "நிறுவனத்தையும், வேலையில்லாமல் தவித்து வரும் ஆயிரக்கணக்கஆந ஊழியர்களை மீட்பதே தலையாய கடைமை. கூடிய வரையில் ஜெட் ஏர்வேஸ் செயல்படும்" என்று தெரிவித்தார்.