கரோனா பரவல் காரணமாக நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. கரோனா தாக்கம் இன்னும் குறையாததால், இந்தத் தேர்வுகளை மேலும் தள்ளிவைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
இச்சூழலில் நீட் , ஜேஇஇ ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பரில் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துவருவதாக தேசிய திறனாய்வு மையமும் கூறியுள்ளது.
நீட் தேர்விலிருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் விலகுகிறார்களா?
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அட்டவணையில், நீட் தேர்வு எழுதுவதற்காக 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் பதிவுசெய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. முதன்முறையாக கரோனா பரவலைக் கருத்திற்கொண்டு, தேர்வு எழுதக்கூடிய நபர்களுக்கு தேர்வு எழுதும் மையத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான நுழைவு அட்டைகளும் விரைவில் வெளியிடப்படவுள்ளன.
மேலும், 99.87% விழுக்காடு தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு செய்த மையங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. வேண்டுகோளின் அடிப்படையில், தேர்வர்களுக்கு, கிருமிநாசினி, முகக்கவசம், கையுறை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு நேரத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் தொடர்பாக மாநில தலைமைச் செயலர்கள், காவல் தலைமை இயக்குநர்கள் ஆகியோருக்கு விரிவான கடிதம் எழுதப்பட்டுள்ளது என அந்த அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வு மன அழுத்தம்: தமிழ்நாடு - ஆந்திரா... ஒரே நாளில் இரண்டு மாணவிகள் தற்கொலை!
இதற்கிடையே நீட், ஜேஇஇ தேர்வுகளைத் தள்ளிவைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜனதா மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கரோனா அதிகரித்துவரும் இச்சூழலில் தேர்வு நடத்தினால் நாடு முழுவதும் அதிகப்படியான மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான வழி ஏற்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
தற்போது, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மனு மீதான விசாரணையில், தேர்வை தள்ளிவைப்பதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை என இந்திய மருத்துவக் கழகம் பதிலளித்துள்ளது.