கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள குடிபெயர்ந்தோர் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.
தற்போது இவர்களை மீட்டு சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக பல்வேறு மாநிலங்களும் நடவடிக்கை எடுத்துவருகின்றன. இதற்கான ரயில் கட்டணத்தை யார் செலுத்துவது என்பது குறித்து அரசியல் கட்சியினரிடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை (மே 8) டெல்லியில் சிக்கியிருக்கும் பிகார் மாநில குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 1200 பேர், சிறப்பு ரயில் மூலம் முசாஃபர்நகர் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கட்டணத்தை டெல்லி அரசு ஏற்றுக்கொண்டதாக அம்மாநில அமைச்சர் கோபால் ராய் ட்வீட் செய்திருந்தார்.
இது குறித்து பிகார் மாநிலத்தை ஆளும் ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் ரஞ்சன் பிரசாத் பேசுகையில், ''தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப டெல்லி அரசு கட்டணத்தை செலுத்தியது. அதனை வைத்து மக்களிடம் பிரபலம் அடைவதற்காக அதன் அமைச்சர் ட்விட்டரில் பதிவிடுகிறார்.
தொடர்ந்து பிகார் மாநில குடிபெயர்ந்தோர்களால் ஏற்பட்ட செலவுகளை பிகார் அரசு கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை வைத்து பார்க்கும்போது மக்களிடம் பிரலமடைவதற்காக ஆம் ஆத்மி கட்சி மலியான அரசியலில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது.
அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகப் பேசும் எதிர்க்கட்சியின் தேஜஸ்வி யாதவ், மக்கள் அவதிப்படும்போது உதவிசெய்ய முன்வர வேண்டும். உங்களின் பொய்யான வாக்குறுதிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பாளர்கள் 30 விழுக்காடு மீட்பு!