ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் தேர்தல் பணிகள் சூடுப்பிடித்துள்ளது. பலரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவண்கல்யான் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பீமாவரம் மற்றும் கஜூவாகா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் கஜூவாகா தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 50 வயதான அவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது பெயரில் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், அதில் ரூ. 33 கோடி அளவிற்கு கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ரூ. 12 கோடி மதிப்புள்ள நகைகள், வங்கியில் தனது பெயரில் ரூ.4.76 லட்சம் ரொக்கம், மனைவி அண்ணா லெஜென்வா பெயரில் ரூ.1.53 லட்சம் ரொக்கம், ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு, ரூ. 5.70 கோடி மதிப்புள்ள18 ஏக்கர் விவசாய நிலம், ரூ.2.75 கோடி மதிப்பில் 6 சொகுசு கார்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த சொத்துக்கள் அனைத்தும் சினிமா, விவசாயம் மற்றும் நிதி நிறுவனம் உள்ளிட்டவைகள் மூலமாக சம்பாதித்தது என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் வங்கி கடன், திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் ரூ.33 கோடி அளவிற்கு கடன் பெற்றுள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.