ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குல்ஜீத் குமார். இவர் காஷ்மீரின் பல்வேறு இடங்களுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு வந்ததை ராணுவ உளவுப்பிரிவு கண்டறிந்தது.
இதனையடுத்து, குல்ஜீத்தின் நகர்வு குறித்து ஜம்மு காஷ்மீரில் கண்காணித்து வந்த சம்பா காவல்துறையினர் நேற்றிரவு(அக்.08) அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இந்திய ராணுவ நிலைகள் குறித்த முக்கியமான ஆவணங்களும், புகைப்படங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்கு உளவுச் செய்திகளை குல்ஜீத் குமார் அனுப்பி வந்ததாகவும், அதற்கு பெரும் தொகையைப் பெற்றதாகவும் காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்பு உயர் அலுவலர்கள் அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
பல முக்கிய இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பல்வேறு சிம் கார்டுகளுடன் நான்கு மொபைல் போன்கள் அவர் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இன்று(அக்.09) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றம் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களை அவர் அனுப்பினார் என்பதையும், அவர் இதுவரை எல்லையைத் தாண்டி அனுப்பிய அனைத்து முக்கியமான தகவல்களையும் பாதுகாப்பு அமைப்புகள் சைபர் பிரிவினரின்கீழ் இணைந்து கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்த சம்பா மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சர்மா கூறுகையில், "நாங்கள் குற்றம்சாட்டப்பட்டவரின் மீது எதிரி நாட்டு முகவர்கள் கட்டளைச் சட்டப் பிரிவுகளின்கீழ், சம்பா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். தற்போது அவரிடம் மேலதிக தகவல்களைப் பெற விசாரணைகள் நடந்து வருகின்றன" என்றார்.