ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 மத்திய அரசால் நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுச் சிறை வைக்கப்பட்டனர்.
மேலும் தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியுற்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜம்மு காஷ்மீரில் உள்ள தொலைத்தொடர்பு தடையை நீக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
இதற்கிடையில் கடந்த மாதம் (டிசம்பர்) ஜம்மு காஷ்மீர் யூனியனில் வீட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்றும் ஐந்துக்கும் மேற்பட்ட தலைவர்கள் வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஓமர் அப்துல்லா ஆகியோரின் வீட்டுச் சிறை தொடர்கிறது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட போது, 26 பேருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!