உலக நாடுகளிடையே இந்திய ராணுவம் பலம்வாய்ந்த ஒன்றாக உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து அதிக பலம் வாய்ந்த பாதுகாப்புப் படை என்ற பெருமையை இந்திய ராணுவம் பெற்றுள்ளது. ராணுவத்தில் சேர இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
![joining Army](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4296993_3x2_army.jpg)
நாட்டிலேயே அதிக பதற்றம் நிறைந்த மாநிலமாக ஜம்மு-காஷ்மீர் உள்ளது. அண்டை நாடுகளால் அதிக அச்சுறுத்தல் உள்ள காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் சவால் நிறைந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சமீப காலமாக பிற மாநில இளைஞர்களை விட ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் தங்களை இணைத்துக்கொள்ள அயராது உழைக்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது 575 இளைஞர்கள் ராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். ஸ்ரீநகரில் லைட் இன்ஃபான்டரி ரெஜிமெண்டில் பயிற்சி பெற்ற வீரர்களுக்கான நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் ராணுவ தளபதிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வீரர்களை வரவேற்றனர்.
![joining Army](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4296993_3x2_army12.jpg)
இந்த நிகழ்ச்சிக்கிடையே பேசிய இளம் வீரரான வாசிம் அஹமது மிர், ராணுவத்தில் சேர்ந்துள்ள இந்த தருணம் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிப்பதாகவும், பயிற்சியில் உடலளவிலும், மன அளவிலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் கூறினார். தனது தந்தையும் ராணுவ வீரர் என்பதால் இந்த ராணுவ சீருடையை அணிந்தே தீர வேண்டும் என்ற லட்சியம் தனக்கு இருந்ததாகவும் தெரிவித்தார்.