கரோனா தொற்று நாம் வாழும் உலகத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்தக் காலத்தைப் பயன்படுத்தி பல்வேறு மாணவர்களும் தங்கள் மனத்திற்குப் பிடித்தமான செயல்களைச் செய்துவருகின்றனர். மேலும், இந்த ஓய்வு காலத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் பல அட்டகாசமான கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்துவருகின்றனர்.
அதன்படி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அமன் கான் என்ற மாணவர் அட்டகாசமான பாதுகாப்பு அலாரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதற்காக எவ்வித சிறப்பு பயிற்சிகளையும் அவர் பெறவில்லை. யூ-ட்யூபில் உள்ள வீடியோக்களை மட்டுமே பார்த்து, அவர் இது குறித்த தகவல்களைத் திரட்டியுள்ளார்.
மேலும், இதற்குத் தேவைப்படும் பெரும்பாலான பொருள்களை அவர் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்துள்ளார். பல மாத தொடர் முயற்சிக்குப் பின்னர். அவர் ஒரு வழியாக தற்போது இந்தப் பாதுகாப்பு அலாரத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்.
வீடுகளில் யாரும் இல்லாதபோது, யாரேனும் வீட்டில் நுழைய முயன்றால், அதில் பதிவுசெய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஸ்பீக்கர், மைக் இணைக்கப்பட்டுள்ளதால், எங்கிருந்து வேண்டுமானாலும் உரிமையாளரால் தொடர்புகொள்ள முடியும்.
இது குறித்து அமன் கான் கூறுகையில், "சிம், லித்தியம் பேட்டரி ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அலாரம் ஒரு வீட்டின் கதவில் பொருத்தப்படும். வீட்டில் அனுமதியின்றி யாரேனும் நுழைய முயன்றால் உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ”தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து மக்கள் ஒழுங்குமுறையை எதிர்பார்க்கின்றனர்”