டெல்லி சத்தர்பூரில் உள்ள ராதா சோமி பியாஸ் கட்டடத்தில் 10 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் புதிய கரோனா மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையமானது இந்தோ-திபெத்திய எல்லைப் படை (Indo-Tibetan Border Police) சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் ஆகியோரது கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், கரோனா மையத்திற்கு திடீரென்று வருகை தந்த இந்தோ-திபெத்திய எல்லை காவல் துறை இயக்குநர் எஸ்.எஸ்.தேஸ்வால், எல்லைப் படையின் சுகாதார வல்லுநர்கள் குழுவினருடனும் ஊழியர்களுடனும் உரையாடினார். மேலும் குறுகிய காலத்தில் கரோனா தடுப்பு மையத்தை தயார் நிலைக்கு கொண்டு வந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "இந்த மையத்தின் நோடல் ஏஜன்சியாக பணியாற்ற இந்தோ-திபெத்திய எல்லைப் படைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. எங்களுக்கு டெல்லி அரசு நிர்வாக ரீதியான உதவிகளை செய்தது. தேவையான உதவிகளை செய்ய மருத்துவர் குழுவுடன் அடங்கிய படை தயாராக உள்ளது.
அலுவலர்களுடன் இணைந்து கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட இந்தோ-திபெத்திய எல்லை காவல் துறை தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே மையத்திற்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன" எனத் தெரிவித்தார்.
இந்த மையம் தான் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையம் ஆகும். ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் பணியாற்றி வரும் இம்மையத்தில், 75 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சமய மாநாட்டில் பங்கேற்றவர்களின் கருப்புப்பட்டியல் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!