இத்தாலியைச் சேர்ந்த ராபர்ட் டொனிசோ என்பவர், கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி கேரளாவிலுள்ள வரகலாவிற்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார். இத்தாலியிலிருந்து வந்ததும், கரோனா அறிகுறிகள் இவருக்கு இருப்பதும் தெரிய வந்ததையடுத்து, அவரை பரிசோதித்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியில் ராபர்ட் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். 22 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ராபர்ட் கரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ராபர்ட் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனும் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணனும் அவரை வழி அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பிய ராபர்ட், கேரளாவில் தனக்குக் கிடைத்த சிகிச்சை வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று எனவும், கேரளா தனக்கு மற்றுமொரு வீடு, நிச்சயம் மீண்டும் கேரளாவிற்கு வருவேன் எனவும் தெரிவித்துள்ளார். இத்தாலிப் பயணியின் இந்தப் பாராட்டும் அவர் நலமுடன் சொந்த ஊர் திரும்பியதும் கேரள அரசிற்குக் கிடைத்த மற்றுமொரு பெருமிதம் என அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ராபர்ட் சிறப்பு வாகனம் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் இத்தாலி புறப்பட்டார்.
இதையும் படிங்க: விளக்கமளியுங்கள் : மத்திய அரசை வலியுறுத்தும் மம்தா