நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதில், மஹாராஷ்டிரா மாநிலம் நாட்டிலேயே கரோனாவால் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியதாவது, "மஹாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், வரவிருக்கும் பருவமழையின் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். முன்னறிவிப்பு ஏதுமின்றி மத்திய அரசு, திடீரென ஊரடங்கு அமல்படுத்தியது தவறு. அதேபோல் இதனை ஒரே நேரத்தில் நீக்குவதும் தவறாகும். கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் பிரதமர் நரேந்திர மோடியால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, சில தளர்வுகளுடன் தற்போது நான்காவது முறையாக மே 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
மேலும், மஹாராஷ்டிரா அரசிற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை என்று கூறிய அவர், வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ரயில்களின் கட்டணத்தில் 85 விழுக்காடு மத்திய அரசு ஏற்கும் என்று கூறியிருந்த நிலையில், இதற்கான தொகையும் இன்னும் மாநில அரசு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
மாநிலத்தில் கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்கான சில மருந்துகளுக்கு பற்றாக்குறை உள்ளதாகவும், முன்னதாக, தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுக்கான பற்றாக்குறையை தாங்கள் சந்தித்தோம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: '10ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக சந்தேகமா, இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்க'