கோவாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான தினேஷ் குண்டு ராவ், மத்திய அரசு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசு, அரசாங்கத் திட்டங்களில் கவனம் செலுத்தாமல் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவருகிறது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. நமது எல்லைகள் அண்டை நாடுகளால் அச்சுறுத்தப்படுகின்றன. பெண்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து செயல்படுவதை நாம் தினமும் காண்கிறோம். கடந்த ஆறு ஆண்டுகளில் எந்தவொரு அமலாக்கத்துறையினரும் ஒரு பாஜக தலைவருக்கு நோட்டீஸ் வழங்கியதை எனக்குக் காட்டுங்கள். பல மாநில அரசுகளை கவிழ்க்க நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத் துறைக்கும், வருமான வரித்துறைக்கும் தெரியாதா அல்லது சிபிஐ-க்கு தெரியாதா?
இந்த நாடு பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் பிரதமர் நரேந்திர மோடியால் நடத்தப்படுகிறது. அவர்கள் இந்த நாட்டின் மனித மற்றும் இயற்கை வளங்களை லாபம் ஈட்ட பயன்படுத்துகின்றனர். இது ஒரு பேரழிவிற்கான நிலைமை என மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.