இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்தபடியான, இந்தியா ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்ப தயாராகிவருகிறது. 2020ஆம் ஆண்டில் ஆளில்லாமலும் 2021ஆம் ஆண்டில் விண்ணுக்கு மனிதனை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. இந்த திட்டத்துக்கு ‘ககன்யான்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கென வீரர்களை தேர்வு செய்யும் பணியை இந்திய விமானப்படை தற்போது தொடங்கியுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் ககன்யான் திட்டத்தின்கீழ், விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) விநியோகம் செய்யவுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, அவர்களை உடல்நலத்தை கண்காணிக்கும் கருவி, தேவையான பெருட்கள், பாராசூட் உள்ளிட்டவற்றை வழங்க நேற்று டெல்லியில் இஸ்ரோ - டி.ஆர்.டி.ஓ. இடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டி.ஆர்.டி.ஓ. பிரிதிநிதிகளும் இஸ்ரோ பிரிதிநிகளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். டி.ஆர்.டி.ஓ. தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி, உயிரி அறிவியல் பிரிவு தலைமை இயக்குநர் ஏ.கே. சிங் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.