கோவிட்-19 பரவல், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ஆகியவை இந்தியா-ஈரான் உறவுகளை தற்காலிகமாக பாதித்துள்ளன. ஆனால், இரு நாடுகளும் தங்களின் நீண்டகால பரஸ்பர புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயல்படும் என்று நம்பிக்கை உள்ளதாக ஈரான் நாட்டைச் சேர்ந்த தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஈரானின் தூதர் முகமது ஹாக்பின் கோமி இது குறித்து ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், சபாஹர் துறைமுகத்திற்கும் ஜாஹிதானுக்கும் இடையிலான ரயில்வே திட்டத்தில் சீன முதலீட்டிற்கு வழி வகுக்கும் விதமாகவே இந்தியாவின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக வெளியான ஊடக செய்திகளை முற்றிலும் மறுத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "சபாஹரில் உள்கட்டமைப்பு மற்றும் துறைமுக வசதிகளை மேம்படுத்த 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் இந்தியாவின் திட்டம் அப்படியே உள்ளது. இத்திட்டம் குறித்து ஊடகங்களில் தவறான செய்திகள் உலா வருகின்றன. இரு தரப்பு அரசு மற்றும் உயர் அலுவலர்களிடம் இருந்தும் எவ்வித எதிர்மறை அறிக்கைகளும் இதுவரை வெளியாகவில்லை.
சபாஹரில் இந்தியாவுக்கு மாற்றாக சீனாவைக் கருதவில்லை. தற்போது இந்தத் திட்டத்தில் ஈரான் சுயமாக முதலீடு செய்து வருகிறது. சீன முதலீடு குறித்து வெளியான செய்திகளில் உண்மை இல்லை. இந்தியாவுக்கான சலுகைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. துறைமுக வசதிகளை வளர்ப்பதில் இந்தியா முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளது. இதுபோன்ற ஒப்பந்தங்களை செயல்படுத்த நீண்ட காலம் ஆகும்" என்றார்.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில், மற்ற நாடுகளுடனான சம்பவங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அவர் கூறினார். லடாக் (சீன ஊடுருவல்) சம்பவம் இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவைப் பாதித்துள்ளது என்பது தவறான கருத்து என்று தெரிவித்த அவர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என்றார்.
கோவிட்-19 பரவும் காலங்களில் இருநாட்டு குடிமகன்களும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதி செய்வதில் இருநாட்டு அரசுகளும் ஈடுபட்டிருந்தன. குறிப்பாக, ஈரானில் இருந்து மட்டும் சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் பத்திரமாக தாயகம் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு மாணவர்களைப் பரிசோதித்தல்:
இந்தியாவில் படிக்கும் ஈரானிய மாணவர்கள் குறித்துப் பேசிய அவர், " இந்தியப் பல்கலைக்கழகங்களில் பல லட்சம் ஈரானிய மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கான தேர்வு அட்டவணையை பல்கலைக்கழகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. ஆனால், ஈரான் மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்படுவதில்லை.
எனவே, ஈரானிய மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, ஒன்று தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் அல்லது ஈரானிய மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்துமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இறுதி ஆண்டுத் தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை பாஸ் செய்யும் மாநிலங்களின் நடவடிக்கைகளை தடை செய்யும் விதமாக அமைந்துள்ள யுஜிசியின் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் பாராட்டியது. இதன் காரணமாகவே ஜெனரல் முகமது ஹாக்பின் கோமி ஆன்லைன் தேர்வு முறை குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையேயான கலாசாரப் பறிமாற்றம் குறித்துப் பேசிய அவர், "கோவிட்-19 முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றம் என்பது நிச்சயம் மீண்டும் தொடங்கும்.
கோவிட்-19ஐ கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட குழு வழங்கிய ஆலோசனைகளை ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா காமினே முழுமையாக கடைப்பிடிக்கிறார். இதன் மூலம் அவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்" என்றார்.
இதையும் படிங்க: இந்தியா-ஜப்பான் உறவின் நம்பிக்கைத் தூணாகத் திகழ்ந்த ஷின்சோ அபே