நாட்டின் குடியுரிமை சட்டத்தில் பாஜக அரசு செய்திருக்கும் திருத்தத்தால் கடந்த மூன்று நாள்களில், வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகள் வன்முறைக்காடாக மாறி இருக்கும் நிலையில், இது குறித்து தனது கருத்துகளை மூத்த அரசியல்வாதியும் வழக்குரைஞருமான சல்மான் குர்ஷித் ஆலம் கான், மூத்த பத்திரிகையாளர் அமித் அக்னிஹோத்திரியிடம் இந்திய நாட்டை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்த பரந்த அளவிலான தனது பார்வைகளை முன்வைக்கிறார்.
அந்த நேர்காணல் இதோ:
கேள்வி: முன்னெப்போதும் இல்லாத அளவில் டெல்லி வீதிகளில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. எதிர்ப்பாளார்கள் - ஆதரவாளர்கள் இடையே வன்முறை வெடித்தது. இந்த நிலைமை குறித்த தங்களது கண்ணோட்டம் என்ன?
பதில்: மிகவும் சோகமான ஒன்று இந்த வன்முறை. வழக்குரைஞராகிய நாங்களே இந்த அரசு எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் உள்ளோம். ஏனென்றால் அதனின் நோக்கம் முறையானதாகவோ சரியானதாகவோ இல்லை. நிலுவையில் உள்ள இந்த விவகாரத்தை மீண்டும் நீதிமன்றம் எடுத்து முடிவுசெய்ய வேண்டும். நீதிமன்றம் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருந்தால், இந்த வன்முறை நிகழ்ந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. இந்த அரசு முற்றிலும் பொறுப்பற்றதாக மாறிவிட்டது. இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. நாடாளுமன்றத்தில் அதீத பெரும்பான்மை உள்ளதால் கண்மூடித்தனமாக இந்த அரசு இப்படி சர்வாதிகாரமாகச் செயல்படுகிறது. ஒரு பொறுப்புள்ள அரசாக இருந்தால், இந்தக் கவலைக்கு இந்த அரசு தீர்வுகாண வேண்டும்.
கேள்வி: சி.ஏ.ஏ. எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையை மறிப்பதாகப் பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது... இதைப் பற்றி?
பதில்: ஆமாம். சிலரால் பொதுமக்களுக்கு போக்குவரத்தில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில நாள்களாக நாம் நம் கண்ணெதிரே கண்டது, அவர்கள் அரசை ஆதரிப்பவர்களாக இருப்பவர்கள் என்பதே. ஒரு கருத்தைக் கூறி அதனை ஏற்க வைக்க முயற்சிக்கும் மக்களால் ஏற்படும் முழுமையான ஆபத்து அவை. நீங்கள் அரசை ஆதரிப்பவர்களாக இருந்தாலும் வன்முறைத்தனமாகத் துப்பாக்கி ஏந்தியோ, வீடுகளைத் தீயிட்டு கொளுத்தியோ பொதுமக்களுக்கு சேதாரம் ஏற்படுத்துவது எவ்விதத்தில் நியாயம். அவை யாவும் கண்டிக்கத்தக்கது.
கேள்வி: இந்த வன்முறைக்கு எவரேனும் ஆதரவு தருகிறார்களா?
பதில்:இருக்கலாம்! குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள். இதற்குப் பின்னணியில் அரசியல்வாதிகள் இல்லை. குடும்பம் குடும்பமாக வந்து மக்கள் பங்கேற்கும் இந்தப் போராட்டங்கள் என் பார்வையில், குடும்பங்களின் போராட்டமாகவே தெரிகிறது. இதில் மாணவர்கள், இளைஞர்களின் பங்கும் உண்டு. இதற்கு முன்பு இதுமாதிரியான ஒரு உன்னத அறவழிப் போராட்டங்களை நான் கண்டதில்லை.
கேள்வி: காங்கிரஸ் கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்தது. இந்திய மாநிலங்கள் பல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. அவற்றின் தற்போதைய சட்ட அங்கீகார நிலை என்ன ?
பதில்: இதற்கு இரண்டு வகையான பரிணாமங்கள் உண்டு. ஒன்று நீதிமன்றமே தகுந்த தீர்வுகாண வேண்டும். இன்னொன்று வன்முறை இல்லாத வகையில் மகாத்மா காந்தி, ஜுனியர் மார்ட்டின் லூதர், நெல்சன் மண்டேலா அவர்களின் வழியில் அமைதியான முறையில் போராடி தீர்வுகாண வேண்டும். சட்ட ஒழுங்கு முறையாக காப்பாற்றப்பட வேண்டும். இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு, மாநில அரசுகளின் கூட்டே இந்தக் கட்டமைப்பு.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான சட்டப்பேரவைத் தீர்மானங்கள் கூட்டாட்சி தந்திருக்கும் உரிமை. அவ்வுரிமையைக் காக்க அம்மாநில அரசுகள், ஒத்துழையாமை போராட்டங்களைக்கூட முன்னெடுக்கலாம். இதனை அரசியலமைப்பு தந்த நியாயமான உரிமையாகவே நான் கருதுகிறேன். உறுதியாக, இந்த அறவழிப் போராட்டங்கள் இறுதி முடிவுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், உச்ச நீதிமன்றம் இந்தப் போராட்டங்களைக் கூர்ந்து கவனிக்கும்.
கேள்வி: தேசிய அளவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் எவ்வாறு போராடுகிறது?
பதில்: காங்கிரஸ் கட்சி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அறிவுப்பூர்வமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களை அடக்க கண்மூடித்தனமாக அதிகாரத்தைப் பயன்படுத்தும் காவல் துறை போன்ற அரசப்படைகளின் மிருகத்தனத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பியுள்ளது. எங்கள் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, வதேரா ஆகியோர் காவல் துறையினரின் கொடூரங்களுக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுகியுள்ளனர். எங்களால் முடிந்தவரை மக்களுக்கு ஆதரவளிப்போம். அவர்களுக்குத் துணை நிற்போம். இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்த எங்கள் மாநிலப் பிரிவுகளை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
கேள்வி: சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. ஆகியவை சிறுபான்மையினரைக் குறிவைக்கும் ஆளும் பாஜகவின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: சிறுபான்மையினர் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு சமூகங்களும் சி.ஏ.ஏ.வுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாக நான் நினைக்கிறேன். இந்த அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக தலித் இயக்கங்கள், சீக்கியர்கள், இந்து நடுத்தர வர்க்கத்தின் அறிவார்ந்த பிரிவுகள் முன்வந்து நிற்கிறார்கள். சி.ஏ.ஏ., எதிர்ப்புப் போராட்டங்கள் அவர்களால் ஒரு வகையான பன்முக ஜனநாயக எதிர்ப்புக் குரலை அடைந்திருக்கிறது எனலாம். நாம் அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். சில இஸ்லாமியர்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்று அரசு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அதனை இந்தவகை எதிர்ப்பு கலைத்துவிட்டது. அரசியலமைப்பு நிர்வாகத்தின் அடிப்படையில் மக்கள் எதிர்த்து தங்களது போராட்டங்களை நகர்த்திக்கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்கள் தங்களைத் தாங்களே காப்பதற்காக போராடவில்லை, மாறாக அவர்கள் நேசிக்கும் இந்த நாட்டை காக்க போராடுகிறார்கள்.
கேள்வி: அண்மையில் நடந்த உள்ளூர் தேர்தலில் டெல்லியின் ஷாஹீன் பாக் போராட்டம் குறித்து கேள்வி எழுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முயன்றார். ஆனால் அது பலனளிக்கவில்லை. இது பற்றி உங்கள் கருத்து ?
பதில்: திருவாளர்கள் மோடி, அமித் ஷா இருவரின் வலையில் நான் சிக்க விரும்பவில்லை. இதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.
கேள்வி: தலைமை பிரச்சனை காங்கிரஸில் எழுகிறது இதற்கு தீர்வு என்ன?
பதில்: ஆமாம். தற்போது நாங்கள் அதிகாரத்தில் இல்லை. மேலும், இரண்டுமுறை தோல்விக் கண்டதால் கவலை அளிக்கிறது. பிற்காலத்தில் மாற்றம் வரும் என்று நம்பிக்கை கொள்கிறேன். இது காங்கிரஸ் உள்கட்சி விவகாரம் இதற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் தீர்வு காணுவார்கள்.
இதையும் படிங்க : போராட்டங்களால் முதலீடுகள் பாதிக்கப்படவில்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்