கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மார்ச் 23ஆம் தேதி முதல் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு மே 25ஆம் தேதி முதல் மத்திய அரசு அனுமதியளித்தது. இந்நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன் லாக் 2.0 வழிக்காட்டுதல்களில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடவுள்ளது. அதில் முக்கியமாக சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து விமான போக்குவரத்துத் துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், ''சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான வழிகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. அவ்வாறு சர்வதேச விமான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால், முதற்கட்டமாக குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படும். டெல்லி - நியூ யார்க், மும்பை - நியூ யார்க், துபாய் - டெல்லி ஆகிய நாடுகளுக்கு இடையே விமானங்கள் இயக்கப்படும். அதேபோல் பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படவுள்ளன'' என்றார்.
ஏற்கனவே அமெரிக்கா, லண்டன், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், இத்தாலி, ஜமைக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் சர்வதேச விமான போக்குவரத்துகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மலேசியா டூ சென்னை: ஹோட்டல் தொழிலாளி நடுவானில் மரணம்!