நாட்டில் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதாக பலர் விமர்சித்துவரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பணவீக்கம் குறித்து பேசிய அவர், "நாட்டில் பணவீக்கம் நான்கு விழுக்காட்டுக்கு கீழ் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கம் 3.21 விழுக்காடாக ஆகஸ்ட் மாதம் இருந்தது. சில்லறை பணவீக்கம் இரண்டு முதல் ஆறு விழுக்காடாக இருக்கலாம் என ரிசர்வ் வங்கியே அறிவித்துள்ளது.
தொழில்துறை உற்பத்தி மீண்டு வருகிறது. தொழில்துறை உற்பத்தி 2018-19 காலாண்டில் மோசமான நிலையில் இருந்தபோதிலும், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அது முன்னேற்றம் அடைந்தது. வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்பட்டதால், அவை பெரிய அளவில் பயன்பெற்றுள்ளது" என்றார்.