பிகார் மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை களம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மகா கூட்டணியும், முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் நேருக்கு நேர் அரசியல் சண்டையிட்டு வருகின்றன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி பிரசாத் யாதவ் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
வெங்காயம் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக, அதனை மாலையாகஅணிந்து தேஜஷ்வி இன்று மேற்கொண்ட பரப்புரை பிகார் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேர்தல் பரப்புரைக் களத்தில் இன்று ஊடகங்களைச் சந்தித்து பேசிய அவர், "ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரின் தலைமையிலான ஆட்சியில் பிகாரில் வேலையின்மை அதிகரித்து உள்ளது. படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
வெங்காயம் விலை ரூ.50-60 தொட்டபோது அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த (என்.டி.ஏ கூட்டணி கட்சியினர்) அவர்கள், இப்போது ரூ.100 தொடும்போது அதை கண்டுங்காணாது அமைதியாக இருக்கிறார்கள். மாநிலத்தில் பட்டினியும், வறுமையும் அதிகரித்து வருகின்றது.
பண மதிப்பிழப்பு, திட்டமிடப்படாத ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் சிறு வணிகர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்திருக்கிறது. நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் ஒடுக்கப்படுகிறார்கள்.
பிகாரில் உள்ள ஏழை எளிய மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ தேவைக்காக வெளி மாநிலங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
முதலமைச்சர் நிதீஷ்குமாரின் தலைமையிலான அரசில் 60 திட்டங்களில் சுமார் 30,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் என அரசு நிர்வாகம் மாறியுள்ளது. லஞ்சம் கொடுக்காமல் எந்த பணியும் நடைபெறாது என்ற பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார்.
இதனை மாற்ற ஒரே வாய்ப்பு, ஆர்.ஜே.டி தலைமையிலான மகா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதனை மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர்" என்றார்.