உலகளவில் முதலீட்டு தர வகையிலிருந்து கடன் அதிகமாகி துணை முதலீட்டு தரத்திற்கு சரியும் நிறுவனங்கள் "ஃபாலன் ஏஞ்சல்ஸ்" என குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில், இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட ஆறு பொதுத்துறை நிறுவனங்கள் ஃபாலன் ஏஞ்சல்ஸ் பட்டியலின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாக உலகளாவிய பொருளியல் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசு நடத்தும் இந்த ஆறு பொதுத் துறை நிறுவனங்களின், கடன் பத்திரங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்படுகிறது. அவை 2021ஆம் நிதியாண்டில் முதிர்ச்சியடைந்து. திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அறிய முடிகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், "மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் மதீப்பீடு இந்தியாவை குறைந்து மதிப்பிட்டுள்ளதாகவே கருதுகிறேன். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான இந்தியாவின் திறனும், எண்ணமும் இன்னும் தங்கத் தரத்திலேயே தான் உள்ளது.
இந்தியாவின் சீர்திருத்தங்களை மதிப்பீட்டு நிறுவனம் ஒப்புக்கொள்ளும் என்றே நான் கருதுகிறேன். முன்னெடுக்கப்பட்டும் வரும் சீர்திருத்தங்கள் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு முக்கியமான கூறுகளாக இருக்கும். அந்த மதிப்பீடுகளை மேம்படுத்துவதற்கு இது துணையாக இருக்கும்.
இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, கரோனா அச்சுறுத்தல் முழுமையாக குறைவதிலும் சீர்திருத்தங்களின் நடைமுறை முடிவு செய்யும். மீட்பு எப்போது நிகழ்கிறது என்பதைப் பொறுத்திருந்தே சொல்ல முடியும். இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் மீட்பு நடக்கும் என இப்போதே சொல்ல முடியாது. காரணம் அது நிச்சயமற்றது.
நிதி அமைச்சகம் இந்த ஆண்டிற்கான பெரிய அளவிலான வளர்ச்சியை முன்வைத்து அதற்கான மதிப்பீட்டை வைத்து செயல்பட்டு வருகிறது. இரண்டாம் பாதியில் அல்லது அடுத்த ஆண்டில் மீட்கப்படலாம் என்பது கூட அடிப்படை எதிர்பார்ப்பின் ஒரு பகுதி தான். பணப் பற்றாக்குறை போன்றவற்றின் நன்மை, தீமைகளை நிதி அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. நாங்கள் அனைத்து விருப்பங்களையும் பரிசீலிக்கிறோம், அவற்றை மதிப்பீடு செய்வோம்.
தனியார்மயமாக்கல் கொள்கையில், வங்கி செயல் உத்தித் துறையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. செயல் உத்தி மற்றும் செயலுத்தியற்ற துறைகளை அடையாளம் காண அரசாங்கம் செயல்பட்டு வருகிறது" என அவர் தெரிவித்தார்.