அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு என்று கூறப்படும் என்.ஆர்.சி. பதிவேட்டில், மூன்று கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 661 பேர் விண்ணபித்திருந்தனர். அதைத் தொடர்ந்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட்ட பெயர் பட்டியலில் மூன்று கோடியே 11 லட்சத்து 22 ஆயிரத்து 4 பேர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 நபர்களின் பெயர் இடம்பெறாதது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து பெயர்கள் விடுப்பட்டவர்கள், அஸ்ஸாம் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சுமார் 400 வெளிநாட்டு மக்கள் பதிவேட்டு தீர்ப்பாயங்களில், (Foreign Tribunals) மீண்டும் முயற்சி செய்யலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது, மேலும் அவர்களுக்கு 120 நாட்கள் நீட்டித்து அவகாசமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் என்.ஆர்.சி.யில் இடம்பெறாத அஸ்ஸாமில் வாழும் மக்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறப்படுகிறார்கள். அவர்களை தனியாக தங்க வைக்க இந்தியாவிலேயே முதன் முறையாக அம்மாநிலத்தின் கோல்பாரா (Goalpara) மாவட்டத்தில் சிறப்பு முகாம் ஒன்று கட்டப்பட்டுவருகிறது.
அந்த முகாம் ரூ. 46 கோடி செலவில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பு, அதாவது ஏழு பெரிய கால் பந்து மைதானத்திற்கு சமமான நிலம் ஒதுக்கப்பட்டு. அங்கு நான்கு அடக்கு மாடி குடியிருப்புகளாக 15 முதல் 17 கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன.
இங்கு சுமார் மூவாயிரம் பேர் தங்குவதற்காக கழிப்பிடம், குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்படும் என்றும், முகாம்களில் தங்கவைப்படும் சிறுவர்கள் அப்பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு செல்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து அந்த குடியிருப்பு கட்டடங்களை சுற்றி இருபது அடி உயரத்திற்கு எல்லை சுவரும் அமைக்கப்படவுள்ளதாகவும், இந்த பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநில சிறைசாலையில் உள்ள குடியுரிமை பெறாத 900 கைதிகளை தங்கவைக்க இந்த முகாம்களை பயன்படுத்துவார்கள் என்று அம்மாநில காவல் துறை வட்டாரங்கள் கூறுகிறது. என்.ஆர்.சி. பெயர் பட்டியலில் இடம்பெறாத அந்த 19 லட்சம் பேரில், பெரும்பாலனோர் இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள். இவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அதிலும் பெயர்கள் சேர்க்கப்படாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறி இந்த முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள்.