விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செயற்கைகோள் தயாரிப்பு, அதனை ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பு செய்யும் என தெரிவித்தார். இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்வெளி பயணம், விண்வெளி ஆய்வு உள்ளிட்டவற்றையும் தனியார் மேற்கொள்ளலாம் எனவும், ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இஸ்ரோவில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்கும் மத்திய அரசின் சமீபத்திய முடிவு, 2017ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட சட்டத்தை அடிப்படையாக கொண்டே அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதன் மூலம் இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்கள், ராக்கெட் வடிவமைக்கவும், அதை இஸ்ரோவிடம் கொடுத்து பரிசோதனை செய்யவும் வழிவகை செய்கிறது.
இந்த மறுசீரமைப்பு விண்வெளித் துறையினர்களிடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தனியாருக்கு வழங்கும் நடவடிக்கை விண்வெளித் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
இது குறித்து விண்வெளித்துறை நிபுணர் ஒருவர் கூறுகையில், “இஸ்ரோவின் உள்கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வது பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். மறுசீரமைப்பு என்பது இஸ்ரோவின் உற்பத்தி, செயல்பாட்டு முறைகளில், தனியார் இணைந்து செயல்படுவதாகும். இஸ்ரோவின் உற்பத்தி அலகுகளில் - ராக்கெட், ஏவுகணை, ஸ்ரீகரிகோட்டா ராக்கெட் ஏவும் தளம், தமிழ்நாட்டில் உருவாகவுள்ள ராக்கெட் ஏவுதளம் - ஆகியவை தனியார்மயமாக்கப்பட வேண்டும். இதனால் இஸ்ரோ இரண்டு மடங்காக பயன் பெற முடியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய விண்வெளித்துறை நிபுணர், “இதைப் போலவே செயற்கைகோள் பேலோட்கள் (சுமந்து செல்லும் பொருட்கள்), தரவு (data) தயாரிப்பு சேவைகளையும் தனியார் வசம் ஒப்படைக்கலாம். தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கூடங்களில், பல்கலைக்கழகங்களில், தனியார்துறை மூலம் பேலோட்களை மேம்படுத்த முடியும்” எனவும் தெரிவித்தார்.
அவரை பொறுத்தவரை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் (டி.ஆா்.டி.ஓ.) விண்வெளித்துறை செயல்படும் திட்டமானது, இஸ்ரோவை வணிகரீதியான அம்சங்களில் முழுமையாக கவனம் செலுத்த உதவும்.
இது குறித்து இஸ்ரோ தலைவரின் முன்னாள் ஆலோசர் விஜய் ஆனந்த், “இந்த அறிவிப்பு பெரியளவில் சீர்திருத்தத்தை உண்டாக்கும். ஏற்கனவே இஸ்ரோ அரசாங்கத்திற்கு சொந்தமாக இயக்கப்படும் நிறுவனத்தை(GOCO) மாதிரியாக பின்பற்றுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோவின் வசதிகளை பல தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த வசதிகளை பெருமளவில் தனியார்மயப்படுத்தி, நியூ ஸ்பேஸ் இந்தியா என்ற பொதுத்துறை பிரிவின் கீழ் வைக்கலாம்” என்றார்.
இதையும் படிங்க: முந்திரி தோட்டமாக மாறிய ஜார்க்கண்ட் மாநிலம்!