இந்திய - சீன எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவிவருகிறது. இதன் காரணமாக இருநாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு குவித்துள்ளன.
இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பு குறித்து ராணுவத் தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், கடந்த திங்கள்கிழமை (ஜூன் 15) இரவு இருதரப்பினருக்கும் இடையே திடீரென வன்முறை வெடித்தது.
கிட்டத்தட்ட 6-7 மணி நேரம் நடந்த இந்த மோதலில், இந்திய தரப்பைச் சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வு இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின் போது தங்களை விட, சீன ராணுவத்தினர் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் இருந்ததாக இந்திய ராணுவ அலுவலர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "கல்வானில் நாங்கள் தாக்கப்பட்டபோது எங்களை விட சீன ராணுவத்தினர் மிக அதிக அளவில் இருந்தனர். ஒப்பீட்டு அளவில் ஒரு இந்திய வீரருக்கு அவர்களிடம் ஐந்து வீரர்கள் இருந்தனர். இருப்பினும், அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து சண்டையிட்டோம்.
அமைதி ஒப்பந்தம் கடைபிடிக்கப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவே நாங்கள் அங்கு சென்றோம். ஆனால், சீன தரப்போ எங்கள் மீது தாக்குதலை அரங்கேற்றியது. இது காட்டுமிராண்டித்தனமாகும்" என்றார்.
கல்வான் தாக்குதலின்போது இந்திய ராணுவத்தினரைக் கண்டுபிடிக்க தெர்மல் புகைப்படமெடுக்கும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவம் இதுபோன்ற கொடூரத் தாக்குதலை நடத்தியதில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் பயங்கர காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்திய-சீன மோதலில் உயிரிழப்புகள் நடப்பது 45 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். முன்னதாக, 1975ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில் நடந்த மோதலின் போது உயிரிழப்புகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிரச்னையை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு அழைத்த சீனா