பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் கூறி இந்திய கப்பற்படை அலுவலரான குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்ததை அடுத்து, அவரை மீட்க இந்தியா பெரும் சட்டப் போரட்டம் மேற்கொண்டது.
இந்நிலையில், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை தடைசெய்து தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இது இந்தியாவுக்கு தற்காலிக நிம்மதி அளித்த நிலையில், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அரசு, குல்பூஷனை விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.