உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளையை பாஜக நசுக்குவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""நமது ஜனநாயகம் கொந்தளிப்பான சூழலுக்கு உள்ளாகியுள்ளது. அரசியலமைப்பின் மீது பல மாதிரியான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமான முதலாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து விட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்தாத அரசு நாட்டை ஆண்டு வருகிறது.
எப்போதும் இல்லாத அளவுக்கு தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சட்டத்தை மதித்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் குற்றவாளிகளுடன் பாஜக கைகோர்த்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளை நசுக்கப்படுகிறது. இது நியாயமா? " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாபெரும் வெற்றிபெற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா - வாழ்த்து தெரிவித்த மோடி