உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவமனையின் 'பூமிபூஜை, அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். மருத்துவமனை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதன் பின் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இந்தியா-சீனா மோதலின்போது ராணுவத்தின் துரிதமான செயல்திறன் நாட்டின் மன உறுதியை அதிகரித்துள்ளது. சீனாவுடனான எல்லை பிரச்னையின்போது நாட்டு மக்கள் அச்சமின்றி தலை நிமிர்ந்து இருக்கும்படி, நாட்டின் பாதுகாப்பை ராணுவம் உறுதி செய்தது" என்று புகழாரம் சூட்டினார்.
ராணுவத்தின் வீர செயல்களை அமைச்சர் பாராட்டி பேசும்போது, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலத்த கைத்தட்டல் மூலம் தங்களது பாராட்டுகளை ராணுவத்தினருக்கு அர்ப்பணித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி எம்.எம்.நாரவனே, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.