டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் 12ஆவது மெடெக் குளோபல் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ இந்தியா விரைவில் உலக நாடுகளின் மருத்துவமனையாக மாறும். நாட்டில் உலகத்தர சிகிச்சை வசதிகள், உயர்தர மருத்துவ பராமரிப்பு போன்றவற்றைப் பயன்படுத்த முடியும். இந்தியா தரமான சிகிச்சையை உலகின் பிறபகுதிகளுக்கு வழங்கும்.
மருத்துவ சாதனங்கள் இந்தியாவுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு வருவதிலும், உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவை சரியான இடத்திற்கு கொண்டு செல்லும்.
இந்தியாவிற்கும் உலக நாடுகளுக்கும் போதுமான அளவு மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய இந்திய மருந்துத் துறை விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. மருத்துவ சாதனங்களின் தொழிலமைப்பானது, கரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்குத் தேவையான தயாரிப்புகளை உள்நாட்டிலேயே தயாரிக்க உதவியது.
நாட்டின் மருத்துவர்களும், துணை மருத்துவர்களும் மற்ற சுகாதாரத்துறை பணியாளர்களும் இந்தியாவின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதற்காக இடைவிடாமல் உழைத்து தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளனர்” என்றார்.