கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா 18 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை வாங்கியுள்ளது. அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு உள்ள வர்த்தக பற்றாக்குறையை குறைக்க எண்ணெய் மற்றும் எரிவாயு ஒப்பந்தங்களுடன் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களும் உதவும் என்று நம்பப்படுகிறது. வர்த்தகத்தில் இந்தியா ஏற்றத் தாழ்வுகளை கடைபிடிப்பதாகவும் அதிக கட்டணங்கள் வசூலிப்பதாகவும் டிரம்ப் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், புதுடெல்லியோ இந்த குற்றச்சாட்டு நியாயமற்றது என்று கூறுகிறது. ''பிற வளரும் நாடுகளின் கட்டணங்களை விட இந்தியாவின் கட்டணம் மிகக் குறைவு என்று நம்புகிறோம்.
பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இந்தியா தரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் பல பொருள்களில் இந்தியாவை விட அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றன.'' என்று இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியாவுக்கு எரி சக்திதுறை ஏற்றுமதியில் குறிப்பாக க்ருட் ஆயில் விற்பதில் இப்போது அமெரிக்கா 6-வது இடத்தில் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து ஹைட்ரோகார்பன் பொருள்களை 7 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு இந்தியா இறக்குமதி செய்துள்ளது. ''அமெரிக்காவுடனான தற்போதைய உறவு மிகவும் பயனுள்ள வகையில் மாறியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரு நாட்டு கொள்கைகளை மதித்து 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்புத்துறையில் இணைந்து பயணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை வேரறுப்பது, இந்தோ பசிபிக் பகுதியில் அமைதியை நிலை நாட்டுவது, இந்த பிராந்தியத்தின் வளர்ச்சியில் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளன'' என்று டிரம்பின் வருகை குறித்து வெளியுறவுச் செயலர் ஹாரீஸ் ஷ்ரிங்ளா இன்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கடந்த 8 மாதங்களாக இரு நாடுகளுக்கிடையே சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தப்பட்டு வந்தாலும் பலனளிக்கவில்லை. தற்போது, வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவது மீண்டும் தாமதமாகியுள்ளது. ''இந்த சிக்கலான தருணத்தில் ஒப்பந்தம் ஏற்படவில்லை அல்லது ஒப்பந்தம் மேற்கொள்வதில் சிக்கல் இருப்பதாக நாம் பார்க்க கூடாது. தற்போதைய பிரச்னை தீர இன்னும் கொஞ்ச நாள் பிடிக்கும்'' என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் அமெரிக்க காங்கிரஸின் வர்த்த பிரதிநிதி ராபர்ட் லைட்திசர் வரவில்லை. டிரம்ப் வருவதால் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்வது தகுந்த பலனளிக்காது என்பதை இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் லைட்திசர் இருவருமே உணர்ந்துள்ளனர். சிக்கல்கள் முழுமையாக தீர்க்க வியூகங்கள் வகுக்கப்பட்ட பிறகே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் பலனளிக்கும் என்று இரு தரப்பும் நம்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. ''அமெரிக்கா போலலே நாமும் ஆதாயத்தை நோக்கிதான் ஒப்பந்தத்துக்ககாக காத்திருக்கிறோம்.
நமது ஜி,எஸ்.பி (General System of Preferences) முறையிலான வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஜி.எஸ்.பி நமக்கு பலன் அளிக்கும் திட்டமாகும். நமக்கான சந்தையையும் சலுகைகளையும் தீர்மானிப்பது அமெரிக்காவின் பணி அல்ல. ஜி.எஸ்.பி ஒரு தலைபட்சமானது என்று கூறி அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அதில் மறுசீரமைப்பை மேற்கொள்ள நாம் தயராக இருக்கிறோம். கடந்த 2019-ம் ஆண்டு ஜி.எஸ்.பி திரும்ப பெறப்பட்ட பொருள்களின் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை'' என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து அமெரிக்க காங்கிரஸ் வர்த்தக பிரநிதி ராபர்ட் லைட்திசர் இந்தியா வரவில்லை. இதனால், இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலுடனான அவரது சந்திப்பு தள்ளி போகிறது. டிரம்புடன் யார் யார் இந்தியா வருகிறார்கள் என்பது குறித்து இன்னும் முழுமையாக முடிவாகவில்லை.
அனேகமாக அமெரிக்க வணிகத்துறை செயலர் வில்பர் ராஸ், அதிபருக்கான ஆலோசகரும் டிரம்பின் மருமகனுமான ஜேர்ட் குஷ்னர், நிதித்துறைச் செயலர் நுச்சின் உள்ளிட்டவர்கள் டிரம்புடன் இந்தியாவுக்கு வரலாம் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் சொல்கின்றன. சரக்கு மற்றும் சேவை வர்த்தகத்தில் இந்தியாவில் பெரும் கூட்டாளி அமெரிக்காதான். கடந்த இரு வருடங்களில் இந்த துறையில் வர்த்தகம் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2018- ம் ஆண்டு இரு தரப்பு வர்த்தகம் 142 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. நடப்பாண்டில் வர்த்தகம் 150 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியவில் 36 மணி நேரத்தில் மூன்று நகரங்களுக்கு டிரம்ப் விசிட் செய்கிறார். கண்களை கவரக் கூடிய விஷயங்களுக்கு மட்டுமே அமெரிக்க அதிபரின் விசிட் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பாதுகாப்புத்துறை உள்ளிட்ட விஷயங்களில் இந்தியா ஒரு முதிர்ச்சியான உறவை எதிர்பார்க்கிறது. இது இரு நாட்டின் உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்றும் நம்புகிறது.
பிப்ரவரி 24ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புதியதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானம் வரை 22 கிலோ மீட்டர் சாலை வழியாகவே அமெரிக்காவின் முதல் தம்பதி அழைத்து செல்லப்படுகிறார்கள். சாலையின் இரு புறமும் லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று மோடியுடன் வரும் அமெரிக்க முதல் தம்பதிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறார்கள். 28 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு இந்திய வரலாற்றையும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன. கடந்த 8 மாதங்களில் மோடியும் டிரம்பும் 5 - வது முறையாக சந்திக்கப் போகின்றனர். இரு நாட்டுக்குமிடையே உறவுகளை வலுப்படுவதற்கான விஷயங்களில்தான் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் உறவில் முன்னேற்றம் ஏற்படுவதையே இதை காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. ''இந்தியா வளர்ந்து வரும் தேசமாகும்.ஒவ்வொரு உறவும் பரிவர்த்தனையின் அடிப்படையில் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. உறவு வலுப்பட இந்தியா காட்டும் அதே முதிர்ச்சி அமெரிக்காவிடம் இல்லாத பட்சத்தில் பெரிய அளவில் ஒப்பந்தங்கள் ஏற்பட வழி இருக்காது '' என்று இந்திய தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, ராணுவம், பாதுகாப்பு, பயங்கரவாதத்தை எதிர்கொள்தல், வர்த்தகம், எரிசக்தி, மற்றும் இரு தரப்பு அக்கறை காட்டும் சர்வதேச பிரச்னைகள் குறித்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது '' என்று வெளியுறவுத்துறை செயலர் கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரம் பேச்சுவார்த்தையில் இடம் பெறாது டிரம்ப் வருகைக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், காஷ்மீர் விவகாரம், சி.ஏ.ஏ, என்.ஆர். சி சட்டங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெறாது என்று புது டெல்லி நம்புகிறது. காஷ்மீரில் 370ஆவது அரசியலமைப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு, சக வெளிநாட்டு தூதர்களுடன் சேர்ந்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டரும் அங்கு சென்று நிலைமையை ஆராய்ந்தார். அதற்கு பிறகு, காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக அரசு தரப்பு சொல்கிறது.
காஷ்மீர் விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தானால் மட்டுமே தீர்க்க முடிகிற பிரச்னை என்றும் இந்தியா அமெரிக்க நாடுகளுக்கிடையேயான உறவை பாதிக்கும் காரணியாக காஷ்மீர் விவகாரம் இருக்காது என இந்திய அரசு சுட்டி காட்டியுள்ளது. ''இந்தியா,பாகிஸ்தான் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் அடிக்கடி கோடிட்டு காட்டிள்ளார். இந்தியாவால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. டிரம்பின் இந்த அறிவிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. அதன் மீது நாம் கவனம் செலுத்தவும் தேவையில்லை. மத்தியஸ்தம் செய்யலாம் என்கிற சிந்தனை சிலரின் மனதில் வருவது இயல்பு, ஆனால், இது குறித்த விவாதம் நடைபெறும் என்று யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை'' என்று இந்தியாவில் இருக்கும் போது காஷ்மீர் குறித்து கணிக்க முடியாத எந்த கருத்தையும் டிரம்ப் தெரிவிப்பாரா என்று சீனியர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது இவ்வாறு பதிலளித்தார்.
''தற்போதைய அரசியல் சூழலின்படி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அமெரிக்கா சமாதான உடன்படிக்கையை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடும். . இந்த தருணத்தில் மோடி-டிரம்ப் சந்திப்பு இந்த பிராந்தியத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா தலிபான்களுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தம் குறித்தும் மோடியிடம் டிரம்ப் விவாதிக்கலாம். தீவிரவாதத்தை எதிர்கொள்வது உள்நாட்டு, பாதுகாப்பு ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்கலாம். தீவிரவாதத்தை பொறுத்த வரை, அமெரிக்கா இந்தியாவுக்கு உறுதியான ஆதரவை அளித்து வந்துள்ளது.
புல்வாமா சம்பவத்துக்குப் பிறகு தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு அமெரிக்கா நல்ல ஆதரவை அளித்தது-மசூத் அஸார் ஐ.நா. அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச தீவிரவாதி என பட்டியலிடப்பட்ட போது அமெரிக்காதான் முன் நின்று ஆதரவளித்தது. பயங்கரவாதத்தை வேரறுக்க அமெரிக்காவுடன் விரிவான ஒத்துழைப்பு ஏற்படுத்திக் கொண்டு தீவிரவாதச் செயல்களை அனைத்து மட்டங்களிலும் வழிமுறைகள் காணப்படவேண்டும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் நல்கும் ஒத்துழைப்புதான் நம் நாட்டின் முக்கியமான பாதுகாப்புத்துறை பங்காளி நாடு நமக்கு செய்யும் மிகப் பெரிய நன்மை '' என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கொரோனா: கர்நாடகாவில் உயிருடன் புதைக்கப்பட்ட 6 ஆயிரம் கோழிகள்