கோவிட்-19 தொற்றின் தாக்கம் விரைவாகப் பரவிவரும் சூழலில் வென்ட்டிலேட்டர்களின் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்திசெய்ய பல்வேறு மருத்துவ நிறுவனங்களும் வென்ட்டிலேட்டர்களின் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளன.
ஒருபுறம் குறைந்த செலவில் வென்ட்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய ஆராய்ச்சிகளும் நடைபெற்றுவருகின்றன. மேல் சுவாசப் பாதையைத் தாக்கும் இந்தக் கரோனா வைரஸ் மூச்சுவிடுவதைச் சிரமமாக்குகிறது. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் மூன்று விழுக்காட்டினருக்கு வென்ட்டிலேட்டர்களின் உதவி தேவைப்படுகிறது.
சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது 60 ஆயிரம் வென்ட்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றில் 10 ஆயிரத்திற்கும் குறைவான வென்ட்டிலேட்டர்களே அரசு மருத்துவமனைகளில் உள்ளன.
தற்போது இந்தியாவுக்கு ஒன்றுமுதல் ஒன்றரை லட்சம் வென்ட்டிலேட்டர்கள் வரை தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மூலப்பொருள்களை இறக்குமதி செய்வதில் எவ்விதச் சிக்கலும் ஏற்படவில்லை என்றால் ஒரு மாதத்தில் நம்மால் 5,500 வென்ட்டிலேட்டர்கள் வரை உற்பத்திசெய்ய முடியும்.
இந்தியாவில் பிப்ரவரி மாதம் 2,700 வென்ட்டிலேட்டர்களும் மார்ச் மாதம் 5,580 வென்ட்டிலேட்டர்களும் உற்பத்திசெய்யப்பட்டன. மே மாதத்திற்குள் 50,000 வென்ட்டிலேட்டர்கள் என்ற உற்பத்தித் திறனை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வென்ட்டிலேட்டரின் விலை ரூ. 5,00,000 முதல் 7,00,000 வரை உள்ளது. அதேபோல இறக்குமதி செய்யப்படும் ஒரு வென்ட்டிலேட்டரின் விலை ரூ. 11,00,000 முதல் 18,00,000 வரை உள்ளது.
தற்போது இரு வகையான வென்ட்டிலேட்டகள் பயன்பாட்டில் உள்ளன. மைக்ரோ பிராசஸரைக் கொண்டு உருவாக்கப்படும் மூன்றாம் தலைமுறை வென்ட்டிலேட்டர்கள். இவை முக்கியமாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
அதேபோல், செயற்கைக் கையேடு சுவாச அலகு (Artificial Manual Breathing) அல்லது பை வால்வு முகக்கவச வென்ட்டிலேட்டர்களும் (Bag Valve Mask ventilators) அவசரக் காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அம்பு பேக் என்று அழைக்கப்படும் இந்த வகையான வென்ட்டிலேட்டர்களின் விலை சற்று குறைவானவை.
நோயாளிகளின் அழுத்தத்தைப் பொறுத்து காற்றோட்டத்தை வழங்க ஏதுவாக ஒரு பையும், கையால் செயல்படுத்தக்கூடிய ஒரு சாதனமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. தானியங்கி முறையில் செயல்படும் இந்த வென்ட்டிலேட்டர்களைl் தேவைப்பட்டால் சுகாதாரப் பணியாளர்களும் இயக்கலாம்.
மாதம் 2 ஆயிரம் வென்ட்டிலேட்டர்களை உற்பத்திசெய்யும் திறனுடைய ஸ்கேன்ரே நிறுவனத்துடன் BEL, BHEL, மஹேந்திரா & மஹேந்திரா ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதன்மூலம் மே மாதத்திற்குள் உற்பத்தித் திறன் 30 ஆயிரமாக உயரும்.
அதேபோல மருதி சுசூகி இந்தியா அக்வா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இது தற்போது நான்காயிரமாக உள்ள அக்வா ஹெல்த்கேர் நிறுவனத்தின் உற்பத்தித் திறனை 10 ஆயிரமாக உயர்த்த உதவும்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க டி.ஆர்.டி.ஓ., இந்திய ரயில்வே உள்பட பல்வேறு தொழில்நுட்ப, மருத்துவ, கல்வி நிறுவனங்களும் முன்வந்துள்ளன. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவை மாதிரி வென்ட்டிலேட்டர்களை உருவாக்கியுள்ளன.
குறிப்பாக டி.ஆர்.டி.ஓ. குறைந்த விலையில் அதிக செயல்திறன் கொண்ட வென்ட்டிலேட்டர்களை உருவாக்க முயன்றுவருகிறது. பல மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சில மாதிரிகளின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
அம்பு பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்ரீ சித்ரா திருனல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வென்ட்டிலேட்டர் மாதிரியை உருவாக்கியுள்ளது. வென்ட்டிலேட்டர்களை உற்பத்திசெய்ய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அனுமதியுடன் இந்திய அரசு விப்ரோ 3டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நெக்ஸ்ட்பைட் டெக்னாலஜிஸ் அம்பு பேக்கை இயக்கத் தேவையான சாதனத்தை ரூ. 4000-க்கு தயாரித்துள்ளது. சண்டிகரிலுள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் அதேபோல தானியங்கி முறையில் இயங்கும் அம்பு பேக்கை உருவாக்கியுள்ளது. மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனமும் அம்பு பேக் தொழில்நுட்பத்தில் இயங்கும் வென்ட்டிலேட்டர் மாதிரியை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு புதிய வென்ட்டிலேட்டர் மாதிரியை மார்ச் மாதம் வெளியிட்டது. மற்ற நிறுவனங்களின் உதவியுடன் டி.ஆர்.டி.ஒ. ஐந்தாயிரம் வென்ட்டிலேட்டர்களை உற்பத்தி செய்யவுள்ளது.
கபுர்தலாவிலுள்ள ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் இந்திய ரயில்வே ஜீவன் என்ற புதிய குறைந்த விலைகொண்ட வென்ட்டிலேட்டர் மாதிரியை வடிவமைத்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்றவுடன் மாதத்திற்கு 100 வென்ட்டிலேட்டர்கள் வரை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல ஐஐடி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று இணையத் தரவுகள் பகிர்தல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜீவன் லைட் என்ற வென்ட்டிலேட்டர் மாதிரியை வடிவமைத்துள்ளது. இதன் விலை ரூ.1 லட்சமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஐ.டி. ரூர்க்கி, எய்ம்ஸ் ரிஷிகேஷ் ஆகியவை இணைந்து பிராண-வாயு என்ற சிறிய ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எளிதில் எடுத்துச் செல்லும் வென்ட்டிலேட்டரை உருவாக்கியுள்ளனர். இதன் செயல்முறை 450 நிபுணர்கள் மத்தியில் விளக்கப்பட்டது. இதன் விலை ரூ.25 ஆயிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஐ.டி தனபாத் பொறியாளர்கள் ஒரே நேரத்தில் இரண்டு நோயாளிகள் ஒரு வென்ட்டிலேட்டரை பயன்படுத்தக்கூடிய சிறப்பு அடாப்டர் (adapter) மாதிரியை உருவாக்கியுள்ளனர். தேவைக்கேற்ப இந்த வென்ட்டிலேட்டர் உற்பத்திசெய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மாதிரி பாடாலிபுத்தரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தமன் -1 என்ற வென்ட்டிலேட்டரை உருவாக்கியுள்ளது. இது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்திற்கும் குறைவான மதிப்புடைய இந்த வென்ட்டிலேட்டரின் உற்பத்தியைத் தொடங்க குஜராத் அரசு அனுமதியளித்துள்ளது.
இதையும் படிங்க: செய்தியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அறிவுரை