பாங்கோங் த்சோ ஏரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் முழுமையாக வெளியேற சீனத்தரப்பினர், இந்தியாவுடன் உண்மையாக செயல்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.
முன்னதாக, மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் வி.முரளீதரன், இந்தியா-சீனா இடையே கடந்த நான்கு மாத காலமாக நிலவும் நிலை குறித்தும், இதற்கான மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும் ஒரு சுருக்கமான அறிக்கையை தாக்கல் செய்தார்.
மேலும் சீனத்தரப்பினர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீற முயற்சித்ததாகவும், மே மாதத்திலிருந்து எல்லைப் பகுதியை கைப்பற்ற சீனா ராணுவம் முயற்சித்து வருவதாகவும், இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
ஜூன் 6ஆம் தேதி இரு தரப்பினரின் மூத்த தளபதிகள் படையை பின்வாங்கும் செயல்முறைக்கு ஒப்புக் கொண்டதாகவும், பின்னர், ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்த தொடர்ச்சியான கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் முரளீதரன் கூறினார்.
மூத்த ராணுவ அலுவலர்களால் முடிவு செய்யப்பட்ட உடன்படிக்கையை சீனத்தரப்பினர் துல்லியமாக பின்பற்றியிருந்தால் இருதரப்பினரும் உயிரிழப்புகளை தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரவு பாங்கோங் ஏரியின் தென் கரையில் இந்தியப் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்ததால் கிழக்கு லடாக் நிலைமை மோசமடைந்தது.
இந்தியா பாங்கோங் ஏரியின் தென் கரையில் பல மூலோபாய பகுதிகளை ஆக்கிரமித்து, எந்தவொரு சீன நடவடிக்கைகளையும் தடுக்க பிராந்தியத்தில் தனது ராணுவத்தை இந்தியா பலப்படுத்தியுள்ளது. சீனாவின் அத்துமீறல் முயற்சிகளைத் தொடர்ந்து இந்தியா கூடுதல் துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களை முக்கிய பகுதிகளில் நிலைநிறுத்தியுள்ளது.