ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உறையாற்றுவதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு செல்ல வேண்டுமானால், பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்த வேண்டும். இதற்காக, பாகிஸ்தான் வான்வெளி மூலம் பிரதமர் விமானம் செல்ல அனுமதி வழங்குமாறு அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "சர்வதேச ஒழுங்கு நடைமுறையிலிருந்து பாகிஸ்தான் மாறி நடந்துள்ளது. மற்ற நாடுகள் வழக்கமாக கொடுக்கும் அனுமதியை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. பாகிஸ்தான் அரசின் நிராகரிப்புக்கு காஷ்மீர் விவகாரம்தான் காரணம் என கூறப்படுகிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்திக்கொள்ள தடைவிதிக்கப்பட்டது. இதனால், சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் இந்த தடை கடந்த ஜூலை மாதம் தளர்த்தப்பட்டது. முன்னதாக, இந்திய குடியரசுத் தலைவர் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.