கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது. இதனிடையே, பொருளாதார வல்லுநர்களுடன் ராகுல் காந்தி தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார்.
அந்தவகையில், முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜனைத் தொடர்ந்து நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். வங்கிகள் திவாலாவதை தவிர்த்து மக்களிடையே பணத்தை கொண்டு போய் சேர்க்கும் வகையில் பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் என அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் தேவை. அனைவருக்குமான பொருளாதார திட்டத்தை இதுவரை வகுக்கவில்லை. செலவிடுவது மட்டுமே பொருளாதாரத்தை எளிதில் மீட்டெடுப்பதற்கான வழிமுறை. அது பொருளாதாரத்தை பெரிய அளவில் ஊக்குவிக்கும். மூன்று முதல் ஆறு மாத காலத்திற்கு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து அவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் தற்காலிக ரேஷன் கார்டு அளிக்க வேண்டும்.
அடிமட்டத்தில் இருக்கும் 60 விழுக்காடு மக்களுக்கு பணம் அளித்தால் கேட்டது ஒன்றும் நடந்துவிடாது. ஏழை மக்களுக்கு மட்டும் நேரடி பண பரிமாற்றம் செய்வது விவாதத்துக்குரியது. பெரும்பாலான ஏழை மக்களிடம் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் பொது விநியோக திட்டத்தை அதன் அடிப்படையில் செயல்படுத்துவது அவர்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும். தேவையை அதிகரிக்க பணத்தை மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் இவ்வேளையில் ஊரடங்கை தளர்த்தக்கூடாது. ஊரடங்கை தளர்த்துவதற்கு முன்பு நோயின் தாக்கத்தை ஆராய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு எப்போது? தேதி அறிவிப்பு