சீனாவுடன் வங்கதேசம் தீடீர் நெருக்கம் காட்டி வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா வங்கதேசத்திற்கு இரண்டு நாட்கள் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைளில் தற்போது தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டுடன் நல்லுறவைப் பேணும் விதமாக முதல் வெளிநாட்டு பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
இரு நாட்டு கூட்டறவு தொடர்பாக இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும் என இப்பயணம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேவேளை, வங்கதேச வெளியுறவுத்துறை செயலர் மசூத் பின் மோமென் இந்த திடீர் வருகை தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சார்பில் இந்தியாவில் தயாராகும் கோவிட்-19 தடுப்பூசியை வங்கதேசத்திற்கு வழங்க இந்தச் சந்திப்பின்போது கோரிக்கை வைத்துள்ளதாக மசூத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட எந்த நாடுகள் தடுப்பூசிகள் தயாரித்தாலும் அதைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என வங்க தேசம் கோரிக்கை வைத்துள்ளதாக ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ’சீனோவாக் பயோட்டெக்’ நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைக்கு வங்கதேச அரசு ஒப்புதல் அளித்த நிலையில், அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வங்கதேசத் தூதராக இருந்த சிரிங்கலா, இந்தத் பயணத்தின்போது வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
அந்நாட்டின் தீஸ்தா நதியை நிர்வகிக்க வங்கதேசத்திற்கு சீனா சுமார் ஒரு பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது, இந்தியாவுக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. தெற்காசிய நாடுகளின் நதிநீர் விவகாரத்தில் சீனா தலையிடுவது இதுவே முதல்முறை.
இந்தியாவுடன் நல்லுறவு கொண்ட நாடாக இருந்தாலும் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் தீஸ்தா நதி தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த 2011ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது.
கிழக்கு இமயமலைப் பகுதியில் உருவாகும் தீஸ்தா நதி, சிக்கிம், மேற்கு வங்கம் வழியே வங்கதேசத்தை சென்றடைகிறது. இந்த நதி வங்கதேசத்தில் பெருவெள்ளத்தை ஏற்படுத்தினாலும், இரண்டு மாத பனி காலத்தின்போது மட்டும் அங்கு வறண்டு விடும். 1996ஆம் ஆண்டு போடப்பட்ட கங்கை நதி ஒப்பந்தத்தின்படி, தீஸ்தா நதி நீரை சம அளவில் பங்கிட்டுத் தர வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் மேற்கு வங்க அரசின் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது வெளியுறவுக் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில்தான் தீஸ்தா நதியை சீர் செய்து நிர்வகிக்க வங்கதேசத்திற்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் நிதியை சீனா வழங்கியுள்ளது. இதன்மூலம் மிகப்பெரும் நதிநீர் தேக்கத்தை உருவாக்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது. மேலும் வங்கதேசத்திற்கு இரண்டு நீர்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
சீனாவின் பி.ஆர்.ஐ.(B.R.I.) திட்டத்திற்கு வங்கதேச பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளது இந்தியாவிற்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செயல்படும் இந்தத் திட்டத்தில் இந்தியா பங்கேற்க மறுத்துவிட்டது. இந்தியாவுடன் நல்லுறவில் இருக்கும் அதேவேளை சீனாவின் கடல்சார் திட்டத்திற்கு வங்கதேசம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் வங்கதேச பிரதமரின் இந்திய பயனத்தின்போது இகு நாடுகளும் ஏழு ஒப்புந்தங்கள், மூன்று திட்டங்களில் கையெழுத்திட்டன. சட்டகோரம், மோங்கலா ஆகிய துறைமுகங்களின் மேம்பாட்டுத் திட்டம், இரு நாடுளுக்கும் இடையே ரயில் போக்குவரத்து மேம்பாடு திட்டம் ஆகியவை இந்த ஒப்பந்தங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
வங்கதேத்திலிருந்து எரிவாயு இற்குமதி, வங்கதேசத்தில் விவேகாந்தா மாணவர் விடுதி, BIPSDI என்ற கல்வி நிறுவனம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில் வங்கதேசத் தூதுவராக விக்ரம் தொரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் நெருக்கத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா கூட்டணியுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தச் சூழலில் சிரிங்கலாவின் வங்கதேசப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.