இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்வதற்கு முன்பே பல முறை சிந்திக்கின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களைக் கவரும் வகையில் பிகார் மாநிலத்திலுள்ள பாட்னா, முசாபர்பூர், பாகல்பூர் ஆகிய நகரங்களில் வீடுகளுக்கே சென்று பழங்களை டெலிவரி செய்யும் திட்டத்தை இந்திய அஞ்சல் துறை தொடங்கியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாகல்பூர், முசாபர்பூர் பகுதியிலிருந்து லிச்சி, மாம்பழம் ஆகியவற்றை எடுத்துவர பிகார் அரசுடனும், மாநில தோட்டக்கலைத் துறையுடனும் பிகார் அஞ்சல் துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம் பழங்களை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்ய முடியும்" என்று தெரிவிக்கப்பட்டது.
கரோனா தொற்று காரணமாகப் பழங்களை விற்க முடியாமல் இருக்கும் விவசாயிகளுக்கு இது பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பழங்களை ஆர்டர் செய்யும்போது, அதில் டெலிவரி கட்டணமும் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தின் தோட்டக்கலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆர்டர்களைப் பதிவிடலாம். அதன்படி லிச்சி பழத்தைக் குறைந்தபட்சம் இரண்டு கிலோவும் மாம்பழத்தைக் குறைந்தபட்சம் ஐந்து கிலோவும் ஆர்டர் செய்ய வேண்டும்.
மேலும், இதுவரை 4,400 கிலோ லிச்சி பழங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் மாம்பழங்களின் ஆர்டர் மே இறுதி வாரம் முதல் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தாண்டு தெலங்கானாவில் ரமலான் பரிசு இல்லை!