டெல்லியில், இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, விண்வெளியில் இந்தியாவுக்கென தனி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆராய்ச்சி மையம் சுமார் 20 டன் எடையில் 2030-க்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதற்காக 2008ஆம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலம் நிலவை ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்டது என்றார்.
அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியதை சுட்டிக் காட்டிய அவர், 603 கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-2 விண்கலம் வருகிற ஜுலை 15ஆம் தேதி புறப்பட்டு நிலாவின் தெற்கு முனையில் தரையிறங்கவுள்ளதாக கூறினார். சந்திரயான் ஒன்றின் மேம்படுத்தப்பட்ட திட்டம்தான் இந்த சந்திரயான்-2 ஆகும் என்றார். இத்திட்டத்திற்க்காக இந்தியா எந்தவொரு நாட்டின் உதவியையும் நாடவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தியா ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் 2022 அண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று கூறினார். ககன்யான் திட்டத்திற்காக அடுத்த ஆறு மாதத்தில் இரண்டு முதல் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இத்திட்டக்குழுவுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். முன்னதாக ககன்யான் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது என்றார்.