சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை கிட்டத்தட்ட முடிந்துள்ளது என்றும், பரிசோதனையின் பின்தொடர்தல் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது என்றும் நிதிஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் பவுல் கூறியுள்ளார்.
பாரத் பயோடெக்கின் கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் சோதனை நிறைவடைந்துள்ளது. ஐதராபாத்தை தளமாகக் கொண்ட மருத்துவ நிறுவனம் ஒன்று தடுப்பூசியின் முதல், இரண்டாம் கட்டத்திற்கான மருத்துவ பரிசோதனைகளை நடத்திவருகிறது.
-80 டிகிரி வெப்பநிலையில் தடுப்பூசியை வைத்திருப்பது இந்தியாவுக்கு கடினமாக இருக்கலாம் என்று கூறினார். ஃபைசரின் தடுப்பூசிக்கு -80 டிகிரி வெப்பநிலை தேவைப்படுகிறது. "இது ஒரு கடினமான சவால். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் -80 ° C வெப்பநிலையில் தடுப்பூசி வைப்பது எளிதான செயல் அல்ல. இருப்பினும், தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று டாக்டர் பவுல் கூறினார்.
டெல்லியில் ஐ.சி.யூ படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் சோதனை 50,000 முதல் 1 லட்சமாக உயர்த்தப்படும்." ஆர்டி பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கருவிகளின் மூலம் சோதனை செய்யப்படும். இதுதவிர, ஓரிரு நாட்களில் 10 மொபைல் சோதனை ஆய்வகங்களும் சேவையில் சேர்க்கப்படும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 10 பன்முக குழுக்கள் டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று நிலைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறினார்.
இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு கடுமையாக முயற்சித்து வருவதாகக் கூறிய அவர், "எவர் உடல்நிலை சரியில்லாமல், அல்லது காய்ச்சல் அல்லது இருமல் இருப்பதை உணர்கிறாரோ, அவர் எந்தவித தயக்கமும் இல்லாமல் கரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும்" என்று பூஷன் கூறினார்.
கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதை தொடர்ந்து டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேட்டபோது, டெல்லி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (டி.எஸ்.டி.எம்.ஏ) அத்தகைய முடிவை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக பூஷன் கூறினார். இந்தியா செவ்வாய்க்கிழமைவரை 82.9 லட்சம் பேர் கரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். இது உலகிலேயே அதிகமாகும். இந்தியாவின் மீட்பு வீதமும் 93 விழுக்காட்டை தாண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.