கல்வான் மோதலின்போது சீன ராணுவம் தாக்கியதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக அந்நாடு ஒத்துக்கொண்டது. இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், சீனாவுக்கு நெருக்கடி தரும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், சீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து எரிசக்தி உபகரணங்களை இறக்குமதி செய்யக்கூடாது என மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மத்திய, மாநில மின்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர், "சீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படாது. நமது நாட்டிலேயே அனைத்தையும் உற்பத்தி செய்கிறோம். 71,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்துறை உபகரணங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதில் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
எல்லையில் அத்துமீறும் நாட்டிடமிருந்து இவ்வளவு அதிகமாக இறக்குமதி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். மின்அமைப்பை வேண்டுமென்றே கெடுக்கும் நோக்கில் வைரஸ் அடங்கிய மென்பொருளை அவர்கள் அதில் மறைத்து வைத்திருக்கலாம்.
இதில் சோகம் என்னவென்றால் எளிதாக தயாரிக்கக் கூடிய கண்டக்டர்கள், டிரான்ஸ்பார்மர்களைக்கூட இறக்குமதி செய்கிறோம். ஆய்வை மேற்கொள்வதன் மூலம், உபகரணங்களின் இறக்குமதியை அரசு ரத்து செய்யலாம்" என்றார்.
இதையும் படிங்க: 'மறமானம் மாண்ட...' - திருக்குறளை மேற்கோள்காட்டிய மோடி