முப்படைகளில் ஒன்றான விமானப்படை, பாதுகாப்புப் பணிகளில் சவால் நிறைந்த பல விஷயங்களைச் செய்து வருகிறது. போர், பேரிடர் உள்ளிட்ட காலகட்டங்களில் வான்வெளியில் பல சாகசங்களைச் செய்து நாட்டுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்திய விமானப்படையின் தளபதியாக பிரேந்தர் சிங் தனோவா பணியாற்றி வருகிறார். அவர் இம்மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில், விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பதாரியா தற்போது இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக உள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் இதற்கு முன்பு பெங்களூருவில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் முதன்மை அலுவலராகவும், தேசிய பாதுகாப்பு அகாடமியில் கமாண்டென்ட் ஆகவும் பணியாற்றியுள்ளார். இவர், இந்திய வான்படை வீரர்களின் வீரதீரச் செயல்களுக்காகவும் அமைதிக்கால சேவைகளின் சிறப்பிற்காகவும் வழங்கப்படும் இந்தியப் படைத்துறையின், பரம் விசிட்ட சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம் மற்றும் வாயுசேனா பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க:
'நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் - இந்திய விமானப் படை தளபதி'