கரோனா, உலக மக்கள் அனைவரும் அச்சத்துடன் உச்சரிக்கும் ஓர் வார்த்தை. சாமானியன் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை எவரையும் விட்டுவைக்காமல் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்காத வரையிலும் நம்மை ஒருவழியாக்கிவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஆம், அடுத்தாண்டு (2021) குளிர்காலம் முடியும் வரை கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்காத பட்சத்தில், இந்தியாவில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 2 லட்சத்து 87 ஆயிரம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகும் என்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய ஆய்வு ஒன்றின் முடிவு கூறுகிறது. அமெரிக்காவிலுள்ள எம்ஐடி (Massachusetts Institute of Technology) பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வில், அடுத்தாண்டின் வசந்தகால (குளிர்காலத்திற்கும் கோடைக்காலத்திற்கும் இடையே வரும் காலம்) முடிவில், உலகம் முழுவதும் சுமார் 25 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், 18 லட்சம் மக்கள் இறப்பைச் சந்திப்பார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எம்ஐடி ஆய்வுக் குழு 84 நாடுகளில் கரோனா பரவுவதை ஒரே நேரத்தில் மதிப்பிட்டுள்ளது. பல நாடுகளிலுள்ள தொற்று நோயியல் வல்லுநர்களால் பயன்படுத்தப்படும் நிலையான கணித மாதிரியை (SEIR) கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்று பரவும் வேகம், வெளிப்படுத்தப்படும் அறிகுறிகள், தொற்றிலிருந்து குணமடையும் வேகம், தொற்றின் வீரியம் (SEIR) ஆகிய நான்கு பண்புகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல பருவநிலை மாற்றம், இறப்பு விகிதம், சோதனை விகிதம் ஆகியவற்றைக் கொண்டும் ஆய்வு செய்யப்பட்டாதாக ஆய்வுக் குழு தெரிவிக்கிறது. இந்த ஆய்வின்படி, 2021ஆம் ஆண்டு குளிர்கால முடிவில் அதிக தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், இந்தோனேசியா, நைஜிரியா, துருக்கி, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை முதல் பத்து இடங்களைப் பிடிக்கும் என்று அறியமுடிகிறது. இந்தப் பத்து நாடுகளில் இந்தியாவே மிக மிக மோசமான பாதிப்பைச் சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை விவரம்:
இந்தியா- 2.87 லட்சம்
அமெரிக்கா - 95 ஆயிரம்
தென் ஆப்பிரிக்கா - 21 ஆயிரம்
ஈரான் - 17 ஆயிரம்
இந்தோனேசியா - 13 ஆயிரம்
மேலும், முன்பை விட தொற்று பாதிப்பு விகிதம் 12 மடங்கு அதிகரிக்கும் என்றும், இறப்பு விகிதம் 50 விழுக்காடு உயரும் என்றும் ஆய்வுக் குழு அதிர்ச்சியான முடிவைக் கூறுகிறது. முடிவுகள் இவ்வாறிருப்பதால், மக்கள் கண்முன் இருக்கும் ஒரே மருந்து தகுந்த இடைவெளி, முகக்கவசம் ஆகியவை மட்டுமே. ஆகவே, அதனை முறையாகக் கடைப்பிடித்தால், இந்த ஆய்வு முடிவுகள் மாறக்கூடும்.
தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கரோனாவால் 1 கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவைக் கட்டுப்படுத்த பாதிக்கப்படாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவை!